நடிகர் பிஜூமேனன் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு: ஏன் தெரியுமா?

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க மாட்டார். இது பற்றி முதலிலேயே தெரிவித்து ஒப்பந்தம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் மலையாள சினிமாவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு பார்ப்போம்..
மலையாள நடிகரான பிஜூ மேனன், தமிழில் தம்பி, மதராஸி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், விஷ்ணு நாராயண் இயக்கத்தில் நடித்த ‘நடன சம்பவம்’ என்ற மலையாளப் படம், கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது. இதில் சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ருதி ராமச்சந்திரன், லிஜோமோல் ஜோஸ் என பலர் நடித்தனர். படத்தை அனூப் கண்ணன் என்பவர் தயாரித்திருந்தார்.
இதன் வெளியீட்டின் போது, புரமோஷனுக்கு பிஜு மேனன் வரவில்லை. இதையடுத்து ஒப்பந்தத்தை மீறியதாகவும் அவர் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் தயாரிப்பாளருக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கேரள திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பான ‘பெஃப்கா’வின் தலைவரும் இயக்குநருமான உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
இவர் வராததால், தொலைக்காட்சியில் இருந்து தனக்கு வரவேண்டிய பணத்தில் ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல, பல படங்களின் புரமோஷன்களில் பிஜு மேனன் பங்கேற்காமல் இருப்பதாகவும் அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், பிஜுமேனன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக ‘நடன சம்பவம்’ தயாரிப்பாளர் அனூப் கண்ணன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
