‘கூலி’ படம் தொடர்பாக, 36 இணைய தளங்களுக்கு கோர்ட் உத்தரவு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இதனை முன்னிட்டு தியேட்டர்கள் இப்போதே கோலாகலமாய் காட்சியளிக்கிறது.
இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் அமீர்கான் என பலர் இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தை, சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, காப்பிரைட் சட்டத்தின் கீழ், சன் பிக்சர்ஸின் அங்கமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவில் ‘கூலி’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது என தடை விதித்து பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல், ஹாத்வே, டாடா, வோடோபோன், ரிலையன்ஸ் உள்ளிட்ட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கும், தனியார் கேபிள் டிவி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
