ஏமாந்து எனக்கு பெண் கொடுத்து விட்டார்கள்: கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேச்சு..

Web Ads

தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைதானே! சரி..விஷயத்திற்கு வருவோம்..

செல்வராகவனும், தனுஷூம் அவரவர் திரைப் பணியில் செம பிஸி என்பது தெரிந்ததே. இந்நிலையில் இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேசிய நிகழ்வுகள் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் எனில்..

‘நான் எனது மனைவி விஜயலட்சுமி பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு கிராமத்து பெண் அவர். அப்போது நான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், அவர்கள் வீட்டில் ஏமாந்து எனக்கு பெண்ணை கொடுத்து விட்டார்கள்.

அவர் மட்டும் இல்லையென்றால் இன்று இந்த குடும்பமே இல்லை. அதனால்தான் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன்.

‘துள்ளுவதோ இளமை’ படத்தை தயாரித்தோம். யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும், செல்வராகவனும் இன்று இல்லை. அதுதான் உண்மை. அவ்வளவு அழகாக பாடல்களை கொடுத்தார்.

தனுஷ் நடிக்கவே வேண்டாம் என்றுதான் வீட்டில் சொன்னார்கள். ஆனால், நான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். செல்வராகவன் மூன்றாவது ஆண்டிலேயே பொறியியல் படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். நானோ படிப்பை முடித்துவிட்டு வா சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

சொன்னதை கேட்டுக்கொண்டு செல்வாவும், அடுத்த நாள் காலேஜ் சென்றார். படிப்பில் கோல்டு மெடலும் வாங்கி விட்டார்.

அதற்கு பிறகு, என்னிடம் வந்து ‘நீங்கள் சொன்னதை நான் செய்துவிட்டேன். நான் சொன்னதை நீங்கள் செய்யுங்கள்’ என்று கூறினார். இதுதானே அக்ரீமெண்ட் என்றும் சொல்லிவிட்டார். பிறகு, எவ்வளவோ முயன்றும் அவருக்கு உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரே இயக்குனராக மாறிவிட்டார் என்பது தனிக்கதை.

அதேபோல், தனுஷ் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சரி ஷூட்டிங் பார்க்கப் போகலாம் என்று நான் சென்றிருந்தேன். க்ளைமேக்ஸ் சண்டை காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில்தான் தனுஷ் தனது சிக்ஸ் பேக்கை காண்பித்திருப்பார்.

அந்த ஷூட்டிங்கின்போது, ஷாட் இடைவேளையில் வேக வேகமாக ஓடி வந்து தரையில் படுத்துக்கொண்டு ஒர்க் அவுட் செய்து மீண்டும் அதே வியர்வையோடு ஓடிச் சென்று நடிப்பார். அதைப் பார்த்து எனக்கு வயிறு எரிந்தது.

இவ்வளவு டார்ச்சர் செய்தா நாம் நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவு கஷ்டப்பட்டதால்தான் இந்த இடத்தை அவரால் தக்க வைக்க முடிந்தது. அதாவது, பிடிவாதமாக தனது மகனிடம் நான் சொல்வதை கேளுடா கேளுடா என சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இன்றுவரை உணர்ந்து வருகிறேன்.

ஏனெனில், நான் பிறந்தது 1952-ம் ஆண்டு. தனுஷ் பிறந்தது 1983-ம் ஆண்டு. இரண்டு கலாசார இடைவெளிகள் ஒட்டுமா?.. ஒட்டாது. நான் சோளம் சாப்பிட்டேன். இப்போது பீட்சா அது இது என்று என்னென்னமோ சாப்பிடுகிறார்கள். எனவே பிள்ளைகளுக்கு, என்ன பிடிக்கிறதோ அதை செய்யவிட வேண்டும்’ என்றார்.

ஒரு தந்தையாக பேசிய அவரது அனுபவ முதிர்ச்சி, தற்போது நிறைய பார்வையாளர்களை யோசிக்க வைத்துள்ளது.

director kasthuri raja recently spoke openly about him
director kasthuri raja recently spoke openly about him