சிறந்த நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ்: தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு..

2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சிறப்பிக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
‘தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், அதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்குச் சின்னத்திரை விருதுகளும்,
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் மாணவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கிச் சிறப்பிக்கபட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்கிட ஆணையிட்டார்கள். அதன்படி 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 183 திரைத்துறையை சார்ந்த விருதாளர்களுக்கும், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த சின்னத்திரை விருதுகள் 101 சின்னத்திரை கலைஞர்களுக்கும்,
2008-2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013-2014 ஆம் கல்வியாண்டு வரை வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 30 விருதாளர்களுக்கும் 4.9.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் 34 விருதாளர்களுக்கும், 2014-2015 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 5 விருதாளர்களுக்கும் 6.3.2024 அன்று சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து,முதல்வரின் வழிகாட்டுதலின்படி 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு சின்னத்திரை விருதுகளுக்கான சிறந்த நெடுந்தொடர்கள்,
கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட சின்னத்திரை விருதுகளும், 2015 -2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 – 2022 ஆம் கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 to 2022 in tamil film and tv awards in tn goverment
