‘கூலி’ படத்திற்கு ‘ஃபயர்’ இமோஜி வழங்குவேன்: அனிருத் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி ரிலீஸாவது தெரிந்ததே. இந்நிலையில் ‘கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள அனிருத், அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் இமோஜிக்களாக பதிவிடுவார்.
இவை இணையத்தில் மிகவும் பிரபலம். சமீபத்திய சில படங்களுக்கு அனிருத் இதனை தவிர்த்து வந்தார். ‘கூலி’ படத்துக்கு இமோஜிக்களை பதிவிடுவார் என பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள்.
இந்த எமோஜிக்கள் பதிவிடுவது தொடர்பாக அனிருத், ‘சில படங்கள் சரியாக ஓடாது என்பது தெரியும் என்பதால், இமோஜிக்கள் விமர்சனத்தை நிறுத்தினேன். அப்படங்களுக்கு அவ்வாறு பதிவிடுவது சரியாக இருக்காது. மேலும், இமோஜிக்கள் பதிவிடுவது கூடுதல் அழுத்ததைக் கொடுக்கிறது. மக்கள் என்னிடமிருந்து விமர்சனங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
நான் எதுவுமே குறிப்பிடாவிட்டால் அப்படம் மோசமாக இருக்கிறது என முடிவு செய்துவிடுகிறார்கள். எனக்கு சில படங்கள் பிடித்திருக்கும், ஆனால், அதனை விமர்சனங்களாக பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. உண்மையில் எனது எண்ணங்களை பகிர்ந்து வந்தேன், அதுவே எனக்கு பின்னடைவாக இருந்தது.
ஆனால், ‘கூலி’ படத்தை மிகவும் ரசித்தேன். அப்படத்துக்கு ’ஃபயர்’ இமோஜிக்களை வழங்குவேன். அப்படம் நிச்சயமாக அனைவரையும் மகிழ்விக்கும்’ என தெரிவித்துள்ளார் அனிருத். தற்போது ‘கூலி’ படத்தின் 3 சிங்கிள் ஸாங் வெளியாகி வரவேற்புள்ளது. குறிப்பாக ‘மோனிகா’ ஸாங் இணையமெங்கும் வேற லெவலில் தெறித்து வருகிறது.
