பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் மாணவர்களின் மனநிலையில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று தங்களது மனநிலை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

கல்கி புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் குறித்து நடிகர் கார்த்தி அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், “இந்திய திரை உலகில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்படத்தின் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் சோழர் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இப்படத்தை ஆங்கில படங்களோடு ஒப்பிட வேண்டாம். தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவர்களின் மனநிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்” என கூறியுள்ளார்.