தனது உடல் நலம் குறித்து வெளியான வதந்திகளுக்கு நடிகர் நாசர் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதில் அளித்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் நாசர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் செயலாற்றிவருகிறார். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சினிமா துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார்.

இவர் தற்பொழுது உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இனி சினிமாவில் இவர் நடிக்க மாட்டார் என்றும் வதந்திகள் பரவியுள்ளது. தற்பொழுது இந்த தகவல் அனைத்தும் தவறானவை என்று நடிகர் நாசரின் மனைவி கமீலா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாசரின் உடல்நிலை குறித்தும், அவர் நடிக்கமாட்டார் என்றும் செய்திகள் பரவுகின்றன. யார் இதை பரப்பியிருந்தாலும் நன்றாக இருங்கள். நாசர் சாப்பிடுவதும் மூச்சுவிடுவதும் சினிமாவைத் தான். தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் நாசரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வதந்திகள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் “என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக்கொண்டே இருப்பேன்” என விளக்கமளித்துள்ளார். தற்போது இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.