லண்டனில் 1540 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார் நடிகர் ஆர்யா.

கோலிவுட் திரை வட்டாரத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா. பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, டெடி போன்ற பல படங்களில் நடித்து அசத்திய இவர் சமீபத்தில் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து கலக்கி இருந்தார்.

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஆர்யா இதற்கிடையில் அவ்வப்பொழுது சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டி வருவார். அதனால் சென்னையில் தினமும் சைக்கிள் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தார். தற்பொழுது லண்டனில் நடைபெற்ற சைக்கிளிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா 1540 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளார்.

அப்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்திய தேசிய கொடியை பெருமையாக அசைத்தவாறு காணப்படுகிறார். அதோடு “எனது குழுவுடன் லண்டன் எடின்பர்க்கில் 1540 கிமீ சைக்கிளிங் வெற்றிகரமாக முடிந்தது. என் வாழ்க்கையில் மிகவும் சவாலான முயற்சிகளில் ஒன்று. எனக்கு ஆதரவு மற்றும் நம்பிக்கை அளித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த சவாலுக்கு தயார்” எனத் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.