Vijay Mallya
Vijay Mallya

Vijay Mallya – லண்டன்: மோசடி மன்னன், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா 2016ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு வர மறுத்ததையடுத்து விஜய் மல்லையாவை, நாடு கடத்துவதற்காக லண்டன் நீதிமன்றத்தில் இந்தியாவின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

மேலும், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4- ஆம் தேதி அன்று தொடங்கியது.

இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை ஒன்றாக இணைந்து, லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, அரசியல் காரணங்களுக்காக முறையற்ற விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ‘வங்கி கடனை செலுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்’ !!.

இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் தெரிவித்திருப்பது: “பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது” என உத்தரவிட்டது.