சினிமா-2-ம் பாகம்: சந்தான பாரதியின் கருத்துக்கு, சீனு ராமசாமி கடும் பாய்ச்சல்..
ஒரு திரைப்படம் ஹிட்டானால், அதை 2-ம் பாகமாக எடுத்து வெளியிடுவது தொடர்பாக, இயக்குனர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்..
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘விடுதலை-2’ படத்தை பார்த்துவிட்டு வந்த இயக்குநர் சந்தான பாரதியிடம் செய்தியாளர்கள், ‘குணா பார்ட் 2’ எப்போது வரும்? என கேட்க, அதற்கு அவர், ‘குணா ஒரு நல்ல படம். அதை ஏன் பார்ட் 2 எடுத்து கெடுக்க வேண்டும்.
பார்ட் 2 படம் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற கதை, நடிகர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் பார்ட் 2 எடுக்கலாம். ஒரு கிளாசிக் படத்தின் பார்ட் 2 படத்தை எப்போதும் எடுக்கவே கூடாது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும். பார்ட் 2 படம் எடுத்து அதனுடைய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது என்று விடுதலை இரண்டாம் பாகத்தை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த இயக்குனர் சீனு ராமசாமி, ‘இரண்டாம் பாகம் வேண்டாம் என சொல்பவர்களுக்கு, ஞானம் இல்லை என்று அர்த்தம், இன்னும் சொல்லப் போனால், முழுக்க முழுக்க சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என அர்த்தம்.
உலகம் முழுவதும், ‘காட்பாதர்’ என்கிற படத்தை எடுத்துக் கொண்டால், இந்த படத்தின் மூன்று சீக்குவன்ஸ் இருக்கிறது. எப்படி பிரசித்தி பெற்ற படங்களை அடுத்தடுத்த முறையினர் பார்த்து ரசிக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, பார்ட் 2 படங்களை நாம் வரவேற்றுதான் ஆக வேண்டும்.
சிலர் ஒரு படத்தை பெரியதாக எடுத்துவிட்டு, அதை இரண்டு படங்களாக வெட்டி பார்ட் 1, பார்ட் 2 படமாக வெளியிடுகின்றனர். அதில், எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், உண்மையான பார்ட் 2 வரக்கூடாது என சொல்பவர்களுக்கு சினிமா தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை’ என்றார்.
தமிழ்த்திரையில், சந்தானபாரதி மிக முக்கியமானவர்களில் ஒருவர். இவர் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். பன்னீர் புஷ்பங்கள், நீதியின் நிழல், என் தமிழ் என் மக்கள், காவலுக்கு கெட்டிக்காரன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சின்ன மாப்பிள்ளை, வியட்நாம் வீடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா இரண்டு படங்களுமே தமிழ் சினிமா மறக்க முடியாத திரைப்படங்கள் ஆகும்.
பொதுவாக, ஒவ்வொரு இயக்குனருக்கும் வெவ்வேறு பார்வைகள், கொள்கைகள், அனுபவங்கள், படைப்பாற்றல் உண்டு. இதில், வெளிவரும் திரைப்படம் எப்படியாயினும் மக்களை கவர்ந்தால் சரி தானே.!