சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து, வருகிற 10-தேதி பட்டைய கிளப்ப இருக்கிறது ‘வேட்டையன்’ திரைப்படம். இப்படத்தில், அமிதாப்பச்சன் வக்கீலாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, ரித்திகா சிங், கிஷோர், உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில்.. லைகா நிறுவனம் தயாரிக்க, த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ‘மனசிலாயோ..’ என்ற பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள டிரைலர், எட்டுத் திசைகளும் திக்கு முக்காட வைரலாகி வருகிறது.

டிரைலரை வைத்து ஒரு படத்தை மதிப்பீடு செய்து விட முடியாது. ஆனால், சில திரை விமர்சகர்களும் சில ரசிகர்களும் கூட வாய்மொழியாகவும், சமூக வலைத்தளங்கள் வழியாகவும்.. தங்களது கருத்துகளை ‘வேட்டையன்’ படக்கதை குறித்து முடிவு செய்து ஏதேதோ பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது, ‘வேட்டையன்’ திரைப்படம், தர்பார் மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களின் கலவையாக இருக்கலாம். ஏனென்றால், அந்த படங்களைப் போலவே ‘வேட்டையன்’ படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்றெல்லாம் கதைத்து, கணிக்கப்பட்டு தொடர்கிறது.

எது எப்படியோ., ‘வேட்டையன்’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை.

பொதுவாக.. சினிமாவில் அன்று முதல், இன்று வரை ஆயிரமாயிரம் காதல் படங்கள் வந்து போயிருக்கின்றன. மேலும், வந்து கொண்டிருக்கின்றன; நாளையும் வரும். அதில், ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டு தெரியும்போது.. படத்தில் அமைந்த காட்சிகளும் புதிதாய் பார்வையாளர்களை ஈர்க்கும்போது வென்று விடுகிறதல்லவா.!

அதுபோல, ‘வேட்டையன்’ படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இதில் சற்று மாறுபட்டு ‘என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக தெறிக்கிறார். முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் ஜானரில் நிச்சயம் வித்தியாசமாய் இருக்கும் எனவும் உற்று நோக்கப்படுகிறது.

அதற்கு சாட்சியாய், டிரைலரின் ஓபனிங்கில் வரும் வசனம் கவனிக்கத்தக்கது. ‘இந்த நாட்டுல பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லை.. ஆனா, பொறுக்கிங்க பாதுகாப்போடு தான் இருக்காங்க..’ என ஒரு பெண் குமுறுகிறார்.

அதைத் தொடர்ந்து வரும் ஃப்ரேமில்; ‘ இந்த மாதிரி பொறுக்கி பசங்கள என்கவுன்டர் தான் பண்ணனும்..’ என இன்னொரு பெண் ஆவேசமாய் உரைக்கிறார்.

ஆக.. அந்த என்கவுன்டர் செய்யும் காரியத்தை கையில் எடுக்கிறார் ரஜினி எனலாம்.

‘குற்றங்கள் தொற்று நோய் மாதிரி; அதை வளர விடக்கூடாது. அநியாயம் நடக்கும் போது, போலீஸ் அமைதியா இருக்கிறதை விட, அதிகாரத்தை கையில் எடுக்கிறது தப்பில்லை..’ என்ற டயலாக்சில் ‘இனியொரு விதி செய்வோம்’ என்கிற எரிதணல் போல.., புதிய தீர்ப்பு ஒன்று எழுதப்படுகிறது; எழுப்பப்படுகிறது.

( இந்நிலையில், விரைவில்.. ரஜினி சாரும் நலமுடன் வருகிறார்; மேலும், மகிழ்வுடன் எதிர்பார்ப்போம்.!)

இனி வேறென்ன.. ஆயுத பூஜைதான். முன்னதாக 11-ந்தேதி சரஸ்வதி பூஜை தான்; இதற்கு முன்னதாக வரும்
10-ந் தேதி பொறுக்கிகளை வேட்டையாடி பலியிடும் ‘வேட்டையன்’. பூஜைதான்.. பார்ப்போமே ஆர்வமுடன்.! ‘எழுகவே.. ரசிகர் படைகள் எழுகவே..’ என.!!