‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது போல, சிறந்த கலை ஆர்வலரை, அதே கலை ஆர்வம் கொண்டவர் போற்றுவர் என்பதும் இயல்பு தானே.! இதோ.. அதுபோல ஒரு நிகழ்வு..

தமிழ்த் திரையுலகில், சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டி, பின்னர் சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. முதல் படமே ஹிட்டடித்து, அவர் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

காலச்சுழற்சியில், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார்.

மேலும், வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார்.

ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்த அவர், கடைசியாக ஹிந்தியில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்தார். தமிழில் அவர் கடைசியாக நித்திலன் இயக்கத்தில் ‘மகாராஜா’ படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அடுத்ததாக, விஜய் சேதுபதி ‘ட்ரெய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

சூழல் இப்படி இருக்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் தொடக்க நாள் விழாவிலேயே பலரையும் வைத்து செய்துவிட்டார் சேது. அவர் தனது பேச்சில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் எழுதிய ஒரு கவிதையையும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பார்த்திபன் அதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

பார்த்திபன் பதிவு: அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் எப்போதோ எங்கேயோ கூறியதை கூர்ய கவனக்கார நண்பர்-நினைவு கூரும்போது, அக்கவிதையின் கவுரவம் கூடுகிறது. தனிமையின் எக்ஸ்ரேவான எனக்கதன் சுயம் அறிந்ததால்.!

தீவு என்றால் நாற்புறமும் நீரன்றி, வேறு துணையற்ற தனிமைக் கூடு! அதன் சோகமறிந்ததால்.! ‘தனியான தீவுக்கு துணையாகப் போய்விடலாமா?’ என யோசிப்பதாய் எழுதியிருந்தேன். ஏதோ இல்லாமலே இருக்கிறேன் BBயில்” என குறிப்பிட்டிருக்கிறார்.

கலைத்துறையில் கர்வமே இல்லாமல்.. புது ‘மை’ கொண்டு, என்றும் புதுமை எழுதும் ‘புதுமைப்பித்தனுக்கும்’ இதனால் கவுரவம் கூடுகிறது எனலாம்.!