நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகர் ரஜினி அவருக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்த் அதன் பிறகு ஞானவேல் இயக்கத்தில் “தலைவர் 170” எனப்படும் திரைப்படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தில் 15 நிமிடங்கள் இடம்பெறக்கூடிய காட்சியில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பயங்கரமாக உற்சாகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே கமலின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருந்த சூர்யா இப்படத்திலும் இணைய இருப்பதால் இப்படம் எப்படி இருக்க போகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.