அருண் விஜய்யின் சினம் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சாந்தனு தளபதி விஜய் குறித்து பேசி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சாந்தனு. இவர் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் ஆவார். சாந்தனுவின் முதல் படமான சக்கரகட்டி திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று அவருக்கு போதுமான கவனத்தை பெற்று தரவில்லை. அதையடுத்து பல படங்களில் நடித்தாலும், இன்னும் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றி அமையவில்லை என்பதால் மன வருத்தத்தில் இருந்த சாந்தனு விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

ஆனால் அதில் அவருக்கு அதிகமான காட்சிகள் இடம் பெறாததால் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து கலாய்த்து வந்தனர். இந்நிலையில் சாந்தனு தற்போது நடிகர் அருண் விஜயின் சினம் திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் விஜய் குறித்து பேசி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறார்.

அதில் அவர், “அருண் விஜய்யை எனக்கு தனிப்பட்ட முறையிலும் பிடிக்கும். அவரின் சினிமா வாழ்க்கையை என்னோடு பல இடங்களில் பொருத்திப் பார்க்க முடியும். பலரும் அவரை சொல்லியே என்னை ஊக்கப்படுத்தினர். விஜய் சார் கூட ஒரு முறை என்னிடம் “அருண் விஜய்ய பாரு இவ்ளோ நாள் கஷ்டத்த தாண்டி வந்துட்டாருல்ல, உனக்கும் அதுபோல நல்லது நடக்கும்” எனக் கூறினார்” என்று பேசிவிட்டு அருண் விஜயின் சினம் படம் வெற்றி பெறவும் வாழ்த்தியுள்ளார். இவ்வாறு நடிகர் சாந்தனு பேசியது ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் பெற்றுள்ளது.