12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய் இயக்குனர் ஷங்கருடன் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் நடிகர் விஜய் அவருக்கான காட்சிகளின் படப்பிடிப்புகளை நிறைவு செய்து இருப்பதாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகயிருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் ஷங்கர் அவர்கள் “நண்பன்” படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதற்காக இயக்குனர் ஷங்கர் அரசியல் திரில்லர் கலந்த கதை ஒன்றை விஜய்யிடம் ஒன்லைனராக கூறியதாகவும், அது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு பிறகு ஷங்கர் இப்படத்தின் முழு ஸ்க்ரிப்ட் பணிகளை முடிக்கவுள்ளதாகவும், இப்படம் ‘தளபதி 69’ அல்லது ‘தளபதி 70’ படமாக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஷங்கர் இணையவுள்ளதால் படம் தொடர்பான உறுதியான தகவலுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.