விரைவில் அதிமுகவிற்கு பெண் தலைமை வரும் என செல்லூர் ராஜூ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் அதிமுக மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ பேசியதாவது, ” உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடுக்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார். குழந்தைகளுக்கு தாயின் இனிஷியலையும் வைக்கலாம் என்ற புரட்சியை செய்தவர் ஜெயலலிதா.
இதேபோன்று மக்களுக்கு அவர் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியவர். விரைவில் அதிமுகவில் பெண்கள் தலைமை வரும், பெண்கள் எதிர்காலத்தில் சாதிக்கும் காலம் வரும்.
மேலும், பெண்களும் ஆண்களை போன்று தேர்தலில் இணைந்து செயல்படுவதால், எதிர்காலத்தில் அதிமுகவில் பெண்கள் தலைமை தாங்க வாய்ப்புள்ளது.
28 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி அதிமுக தான், இந்த அரசு மக்களுக்கானது, அவர்கள் நினைத்தால் தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்” இவ்வாறு கூறினார்.
அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கூட்டத்தில் அதிக மகளிர் பங்கேற்றதால், அவர்களை உற்சாகபடுத்தவே இவ்வாறு கூறியதாகவும் , மேலும் வேறு எந்த காரணமும் இல்லை எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.