மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி சீமான் கருத்து..

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி.

அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது இந்த இளவயதில் அவரிடம் இருப்பது வியப்பாக இருக்கும்.

இரண்டாவது எங்கள் மண்சார்ந்த கதைகளை மிகை இல்லாமல், இயல்பாக அந்த வாழ்வியலோடு மக்களை கொண்டு போய் சேர்ப்பது ரொம்ப கடினம். அவர் எடுத்த பைசனும் பரியேறும் பெருமாளும் இரு புறமும் கத்தியை வைத்து நடக்கும் ஒரு கதைக்களம். அதை மாரியை தவிர வேறு யாரும் அவ்வளவு நேர்த்தியாக கொடுக்க முடியாது. இதில் எனக்கு எப்போதும் அவரை தூர நின்று பார்த்தாலும், அருகில் நின்று பார்த்தாலும் வியப்பு தான்’ என்று பேசினார்.

விருது பெற்றுக் கொண்ட மாரி செல்வராஜ் ‘நான் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் இருந்தே அண்ணனுடைய பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். அவருடைய கதை சொல்லல் எனக்கு பிடிக்கும். அண்ணன் தன்னுடைய ஆஃபிஸில் வெங்காயம் உரித்துக் கொண்டே, கறி வெட்டிக் கொண்டே கதை சொல்வார் என்பதை எல்லாம் அறிந்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அவர் எப்படி கதை சொன்னார் என பல உதவி இயக்குநர்கள் `வாழ்த்துகள்’ கதை, `தம்பி’ கதை எல்லாம் எங்களிடம் சொல்வார்கள்.

மழைபெய்யும் காட்சியை சொன்னால், நம் மனதில் மழை பெய்யும் என சொல்வார்கள். அப்போதே அவர் என்றால் எனக்கு வியப்பு தான். என்னுடைய படத்தை பார்க்கவில்லை என்றாலும் எப்போது பார்ப்பேன் என்பதையும் கூறுவார். பார்த்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் சரி போன் செய்து பாராட்டக்கூடிய அன்பான அண்ணன் சீமான்’ என கூறியுள்ளார்.

seeman about mari selvaraj movies
seeman about mari selvaraj movies