நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் இன்று நடைபெற உள்ள டிரைலர் வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி இருக்கும் இப்படதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியிட உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்தார் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான “ஏறுமயிலேறி” என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து சர்தார் திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகி இருந்தது. அதில் அக்டோபர் 14ஆம் தேதி ஆன இன்று இப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகும் என்ற அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், சர்தார் திரைப்படத்தின் கிராண்ட் ட்ரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 14ஆம் தேதியான இன்று மாலை Nexus Vijaya மாலில் 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா, ரெஜிஷ விஜயன், லைலா மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் வர இருக்கின்றனர்.