எல்லாவற்றையும் அரசியலாக்க முடியாது: ‘ஜனநாயகன்’ பற்றி சரத்குமார் பேச்சு..
விஜய் கடைசிப்படமாக நடித்து ஹெச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சில திருத்தங்களை சொன்னார்கள். அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்த பிறகும் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
இதன் காரணமாக கேவிஎன் நிறுவனம் நீதிமன்றம் சென்றது. தனி நீதிபதி படத்துக்கு சாதகமான தீர்ப்பு வழங்க, மத்திய தணிக்கை குழு வாரியம் செய்த மேல்முறையீட்டில் பாதகமான தீர்ப்பு வந்தது. தற்போது இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.
முன்னதாக, ஜனநாயகன் படம் ஜனவரி 9-ந்தேதியும் பராசக்தி படம் 10-ந்தேதியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இச்சூழலில் ஜனநாயகன் படம் வெளியாகாத காரணத்தால், பராசக்தி படத்துக்கும் சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டார்கள். மொத்தம் 25 இடங்களில் அவர்கள் சொன்ன திருத்தங்களை படக்குழு செய்ததால், படம் ரிலீஸானது. தற்போது படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், சரத்குமார் இவ்விரண்டு படங்களின் நிலை பற்றி தெரிவிக்கையில், ‘பராசக்தி என்பது தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட படம். இது 1965-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம்.
இந்தி மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக்க முயன்றதால்தான் மக்கள் இப்படிப்பட்ட முறையில் நடத்தப்பட்டார்கள். அந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது என்ன நடந்தது என்பதையே இந்தப் படம் காட்டுகிறது.
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சில எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. சென்சார் போர்டு என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு. நான் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தாலும், என் படம் நான்கு ஆண்டுகள் தடைபட்டிருக்க முடிந்தால், வெளியிடத் தகுதி இல்லை என்று அவர்கள் கருதும் எந்தப் படத்தையும் சென்சார் போர்டு எதிர்க்கலாம். இந்த நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் அரசியலாக்க முடியாது’ என கூறியுள்ளார்.

