Sabarimala Temple
Sabarimala Temple

Sabarimala Temples – சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மண்டல பூஜை விழாவிற்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ‘சபரிமலையில் நடந்த மண்டல பூஜை விழாவில், சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கியை பட்டிவீரன்பட்டி பக்தர் ஒருவர் சுமந்து சென்றார்’.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர் ராமையா, வயது 55.

இவர் 12 வருடங்களுக்கும் மேலாக சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களில், எமர்ஜென்சி பிரிவில் சேவை செய்து வருகிறார்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள்.

அந்த சமயத்தில், பக்தர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, உயிரிழக்க நேரிட்டாலோ உதவுவது இவர் இருக்கும் பிரிவின் பணியாகும்.

இவரது இப்பணிக்காக ‘மண்டல பூஜையின்போது ஐயப்பன் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை, சுமந்து வரும் வாய்ப்பை அகில பாரத ஐயப்பா சேவா சங்க அமைப்பு இவருக்கு வழங்கியுள்ளது’ குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் நேற்று நடந்த மண்டல பூஜை விழாவுக்காக தங்க ஆபரண பெட்டியை சுமந்து சென்றார்.

இதுகுறித்து ராமையா கூறுகையில்: “நான் சபரிமலையில் செய்து வரும் தொடர் சேவைக்காக அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமக்கும் அரிய பாக்கியத்தை எனக்கு வழங்கியது.

மேலும், இந்த பாக்கியம் தொடர்ந்து 9வது முறையாக எனக்கு கிடைத்துள்ளது. இதை என் வாழ்நாள் பாக்கியமாக எண்ணுகிறேன்.

என் ஆயுள் முழுவதும் இச்சேவையை செய்வேன் ’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.