ஜிம்முக்கு செல்கிறீர்களா, ஜாக்கிரதை: நடிகை ரகுல் பிரீத் அனுபவம், அறிவுறுத்தல்..
‘எனது உடல்நிலை குணமாக இன்னும் 2 வாரங்கள் ஆகும்’ என ரகுல் பிரீத் சிங் வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்த இவரது வீர விளையாட்டும் அனுபவமும் காண்போம். வாங்க..
நடிகை ரகுல் பிரீத் சிங், கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பலத்த காயமடைந்தார். படுத்த படுக்கையான அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். தனது உடல் நிலை குறித்து, அவர் கூறும்போது,
‘ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது 80 கிலோ எடையை தூக்கினேன். அப்போது, கீழ் முதுகு தண்டில் சிறிய வலி இருந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் மேலும் தூக்கினேன். அது மிகப்பெரிய தவறாகிவிட்டது.
ஜிம்மை விட்டு நேராக ஷூட்டிங் சென்றுவிட்டேன். அங்கு என்னால் உடையை கூட குனிந்து மாற்ற முடியவில்லை. அப்போதும், நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பின்னர், அக்டோபர் 10-ம் தேதி பிறந்த நாளுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய இடுப்புக்கு கீழ் பகுதி தனியாக விழப்போவது போல் ஓர் உணர்வு. மயங்கி விட்டேன்.10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். ஆனால், இன்னும் சரியாகவில்லை. விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என நம்புகிறேன்.
ஜிம்மிற்கு செல்பவர்கள் தமது உடலுக்கேற்ற உடற்பயிற்சிகளை செய்யாமல், மிகவும் கடுமையான பயிற்சிகளை செய்கின்றனர். மேலும் சிலர் குறிப்பிட்ட நேரம் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யாமல், தோன்றும் நேரமெல்லாம் செய்கிறார்கள். இது மிகவும் தவறு.
ஜிம்மிற்கு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எடையைதான் தூக்க வேண்டும். சில விதிகளை மதிக்காமல் இருப்பதால்தான் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. அதிக எடை தூக்கும்போது பயிற்சியாளர்களின் ஆலோசனையை கேட்டே தூக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதன்படி, பின்பற்றினால் எந்த பிரச்சினையும் வராது.
இதுபோன்ற காயங்கள் குணமாக 6 முதல் 8 வாரங்கள் ஆகும். இப்போது 6-வது வாரத்தில் இருக்கிறேன். இன்னும் 2 வாரங்களில் முழுமையாக குணமடைவேன் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
50 கிலோ பஞ்சு மிட்டாய் போல இருக்கிற ரகுல், 80 கிலோ எடையை தூக்கியதால இடையில் எவ்வளவு பிரச்சினை.! எதுக்கு ஓவர் ரிஸ்க், ஒலிம்பிக்லயா கலந்துக்க போறோம்; ஸோ.. கவனம்.!