சீரியல் நடிகருடன் திருமணம் செய்து கொண்டது என்னுடைய மகளே இல்லை என அதிர்ச்சிகர அறிக்கை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். இவரது மகள் பிரியா என்பவர் சீரியல் நடிகர் மனிஷ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.

இதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்கிரன் இந்த விஷயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது.என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை.எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனை தவிர வேறு பிள்ளைகள் கிடையாது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை “வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப் பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விசயம் என் காதுக்கு வந்ததும்,அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது எனக்கு தெரிய வந்தது.

அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும்,என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள்.இதையெல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்ட நான்,என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை.அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப் பெண் சொல்லியிருந்தார். அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப் பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ” சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்” என்று சொல்ல,நாங்களும் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான, “லட்சுமி பார்வதியை” பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லி விட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல், பொய் பொய்யாக பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண்.

இந்த விசயத்தில் நான் கோபப்பட்ட போது கூட, என்னை சமாதானப்படுத்தி, அந்தப் பெண்ணுக்காக பரிந்து பேசி இன்று வரை அந்தப் பெண்ணுக்கு உறுதுணையாக நிற்பது, என் மனைவி மட்டும் தான். பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது. என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.

ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம். இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது, என்னவென்றால், என் பெயரைப் பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்த பிரச்சினைக்கும் நான் பொறுப்பல்ல, என்பது தான்.இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சீரியல் நடிகர், தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப் பெண்ணிற்கு கணவனாகிக் கொள்ளக்கூடும். ஆனால், எந்தக் காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.