நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கடிதம் மூலம் பாராட்டியுள்ளார்.

‘ஒத்த செருப்பு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அகிரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறியிருந்தார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு மட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதால் விரைவில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் பார்த்திபனை கடிதம் மூலம் பாராட்டியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் ‘இரவின் நிழல்’ படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே சாட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும் அனைத்து பட குழுவினருக்கும் மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்டர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என கூறியுள்ளார். தற்போது இக்கடிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.