வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் வழங்க, “மெட்ரோ “சிரிஷ் – சாந்தினி ஜோடி நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையில், “பர்மா”, “ஜாக்சன்துரை” படங்களை இயக்கிய தரணிதரனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் “ராஜா ரங்குஸ்கி.”

ஒரு இளம் போலீஸ் ரைட்டருக்கு, ஒரு இளம் பெண் ஸ்டோரி ரைட்டர் மீது கண்டவுடன் காதல். இக்காதலில் போலீஸ் ரைட்டரான அந்த ஹீரோ குரலிலேயே ஒரு அனாமத்து வாய்ஸ், நாயகன், நாயகி இருவரது செல்போனிலும் புகுந்து புறப்பட்டு, சந்தர்ப்ப சாட்சியங்களையும் ஹீரோவிற்கு எதிராக உருவாக்கி, அவரை கொலையாளி ஆக்கி. அவர்களது லவ் வை கவ்’வி கட் செய்து விடப்பார்க்கிறது.

ஹீரோவின் உடன் இருக்கும் போலீஸே, போலீஸ் ஹீரோவை துரத்தி பிடித்து, குற்றவாளி ஆக்கி கூண்டில் அடைக்கப் பார்க்கிறது. ஆனால், அவர்களிடமிருந்து தப்பும் நாயகர், தன் வாய்ஸில் பேசும் நபர் யார்? என்று தெரிந்து கொண்டாரா? அந்த நபர் தான் கொலையாளியா? குற்றவாளியா..? அல்லது நாயகரே குற்றவாளியா..? யார் தான் குற்றவாளி? கொலையாளி..? என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது “ராஜா ரங்குஸ்கி” படத்தின் மீதிக் கதையும். களமும்.

ராஜா வாக. “மெட்ரோ” சிரிஷ், இளம் போலீஸ் ரைட்டர் ‘கம்’ கான்ஸ்டபிளாக செம கச்சிதம். போலீஸ் கட்டிங், உதட்டு வரும்பை ஓட்டி நறுக்கப்பட்ட மீசை, காக்கி சட்டை பேன்ட் சகிதம் பயம் கலந்த சந்தேக பார்வை என இளம் கான்ஸ்டபிள்களுக்கே உரிய லுக்கில், இப்படக் கதைக்கு மேலும் வலு சேர்த்திடும் நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ரங்குஸ்கி எனும் எழுத்தாளர் சுஜாதாவின் புனைப்பெயரை தன் பெயராக கொண்ட பெண் எழுத்தாளராக (?) நாயகி சாந்தினி, செம்ம நடிகைம்மா… நீ… என்னும் அளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார். கேஸுவல் காஸ்டியூம்களிலேயே கலர்புல்லாக ரசிகர்களை கவரவும் செய்கிறார். வாவ் கீப் இட் அப் அம்மணி!

ஹீரோவின் நண்பன் பாஸ்கராக கல்லூரி வினோத், போகிற போக்கில் தன் வாய்க்கும், காண்போர் கண்களுக்கும் வலிக்காமல் டைமிங் காமெடிகளில் கலக்கி இருக்கிறார் கலக்கி.

சீபி சிஐடி போலீஸ் கேகே வாக வரும் ஜெயக்குமார், மரியா மற்றும் மேரியாக வரும் அனுபமா குமார், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியமாக வரும் விஜய் சத்யா, போட்டோகிராபர் – மது, பல கோடி கொடுத்து புராதன பைபிளை வாங்கும் பிசினஸ் மேன் ஸ்டீவ்வாக கோட் ஷுட் – தாடி மீசை சகிதம் மர்ம பார்வையோடு வந்து போகும். இப்படத் தயாரிப்பாளர் வாசன் அலைஸ் சக்தி வாசன் உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

ஷாபிக் முஹமது அலியின் படத்தொகுப்பு செம ஷார்ப் என்பதும், மொத்தப் படமும் இரண்டே மணி நேரம் என்பதும் இப்படத்தின் பெரும் பலம்.

யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவியமாய் மிளிர்வதுடன் யார் கொலையாளி? யார் உண்மை குற்றவாளி..? என எல்லோரையும் சந்தேகப்பட வைப்பதில் செம்மையாக ஜெயித்திருக்கிறது!

யுவன் சங்கர் ராஜா இசையில், அவரே பாடியுள்ள “பட்டுக்குட்டி…”, “ஷேடோ தீம்” நடிகர் எஸ்டி ஆர்பாடியுள்ள “மிஸ்டர் எக்ஸ்..” மேலும், “காதல் கானா…”, “கிப்ட் ஆப் லைப்…” உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் கதைக் கேற்ற மிரட்டல்!

“பர்மா”, “ஜாக்சன்துரை” படங்களை இயக்கிய தரணி தரனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும், இயக்கத்தில் செம க்ரைம் மற்றும் த்ரில்லர் சஸ்பென்ஸ் சமாச்சாரங்களை உள்ளடக்கிய மர்டர் மிஸ்டிரி படமாக வந்துள்ள “ராஜா ரங்குஸ்கி” எதிர்பார்ப்பே இல்லாமல் தியேட்டருக்கு வரும் ரசிகனை செமயாய் வசீகரிக்கும்.

அதற்கு அத்தாட்சியாக, மொத்தப் படமும் இரண்டே மணி நேரம் என்பதையும், படத்தில் இடம் பெறும் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பைபிள் பற்றிய தகவல்களையும், மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மற்றுமொரு பெயரான ரங்குஸ்கி, இப்பட நாயகியின் நாமகரணமாக்கப்பட்டிருப்பதும், அதுவே இப்படபாதி டைட்டில் ஆகி இருப்பதையும், “காதல் ஒரு மேஜிக் மாதிரி எப்ப வேணா, என்ன வேணா நடக்கலாம்…” என்னும் காதல் ரசம் சொட்டும் வசனங்களையும், “நீ போலீஸ் தானா கண்டுபிடி.. தமிழ்நாடு போலீஸ் மேடம்….” என்பது உள்ளிட்ட நறுக்கு தெரித்தார் போன்ற வசனங்களையும் டைமிங் காமெடி சீன் களையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மொத்தத்தில், “ராஜா ரங்குஸ்கி’ – புதுமை விரும்பும் ரசிகனுக்கு இனிப்பான ‘ரசகுல்லா ஜீ !

Rating: 3.25/5