பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெளியாக இருக்கும் ட்ரெய்லர் கமல்ஹாசன் குரலில் ஒலிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான பொன்னியின் செல்வன் கதைக்களத்தை அதே தலைப்போடு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

அண்மையில் இப்படத்தில் போஸ்டர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் மற்ற கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை படக்குழு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. மேலும் இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் தலைமை தாங்குவார்கள் என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமானும் தனது இசை குழு உடன் இணைந்து பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அனைத்து பாடல்களையும் நேரலையில் நிகழ்த்த உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் நடக்க இருக்கும் மற்றொரு சிறப்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் பாகம் 1 ட்ரெய்லர் வெளியிடப்படுவதோடு இந்த ட்ரெய்லர் கமல்ஹாசன் குரலில் ஒலிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கின்றனர்.