Plastic Ban TN
Plastic Ban TN

Plastic Ban TN -சென்னை: தமிழகத்தில் நாளை முதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

மேலும், இதை மீறினால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் பயன்படுத்த, ‘ஜனவரி 1 -ம் தேதி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்படுகிறது ‘என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார்.

அதை தொடர்ந்து, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்றவற்றை தடை செய்து கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்த மாவட்டம் வாரியாக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

ஆனால் இந்த தடைக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கூறுகையில்: “பல லட்சம் ரூபாயை இந்த தொழிலில் கடன் வாங்கி நாங்கள் முதலீடு செய்துள்ளோம். 2022ம் ஆண்டு தான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதனை மாநில அரசு தடை செய்ய இயலாது. மேலும் இது சிறு, குறு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை நசுக்கும் செயல்” இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் பிளாஸ்டிக் தடை உத்தரவை எதிர்த்து பல்வேறு வழக்குகளையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இருப்பினும், வழக்குளை விசாரித்த உயர் நீதிமன்றம் பிளாஸ்டிக் தடை உத்தரவிற்கு எதிராக எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் “நாளை முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவானது தமிழகத்தில் அமலுக்கு வருகிறது”.

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் ஊராட்சி, வட்டம், மாவட்டம், மண்டலம் வாரியாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை யாராவது உபயோகித்தால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்வோர்,அதை பயன்படுத்துேவார் என பிரித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.