ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் சும்பா தீவில் இன்று காலை மீண்டும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் , மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதியில் தஞ்சமடைந்தனர்.

இந்தோனேஷியாவின் சும்பா தீவில் ஏழரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சும்பா தீவில் இன்று அதிகாலை மீண்டும் இரு முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ரிக்டர் அளவு 5.9ஆக பதிவானது. இதனால் வீடு மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து அங்குள்ள மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.

அதனை தொடர்ந்து அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது .இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடுகள் அதிகமாக சேதமடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேஷியாவில் கடந்த 28 ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.