“அர்ஜுன் ரெட்டி” தெலுங்குப் படப் புகழ் நாயகர் விஜய் தேவார கொண்டா, தமிழில், முதன் முதலாக நடித்திட, “ஸ்டுடியோ கிரீன்” கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் “நோட்டா”.

கதைப்படி, முதல்வர் நாற்காலியில் ரொம்ப வருஷமாக இருக்கும் நாசர், தான் பெருசு பெருசாக செய்த ஊழல்களில் எல்லாம் தப்பித்து சின்னதாக செய்த சொகுசு பேருந்து ஊழல் வழக்கொன்றால் சிறை செல்வோம்… என்பதை தெரிந்து கொண்டு, தன் ஆஸ்தான சாமியாரின் கூற்றுப்படி, லண்டனில் இருந்து இந்தியா திரும்பி, சமூக சேவை கூடவே, அந்த வயதிற்கே உரிய ஆட்டம், பாட்டம், குடி கும்மாளம்… என ஜாலியாகத் திரியும் தன் மகன் விஜய் தேவர கொண்டாவை முதல்வர் ஆக்கிவிட்டு சிறை செல்கிறார்.

முதலில் முதல்வர் பதவியில் விருப்பம் இல்லாமல் அந்த பதவியை ஏற்கும் விஜய் தேவர கொண்டா, தன் அப்பாவின் தவறுகளை தொடர்ந்து சுட்டி காட்டி வந்த தங்கள் குடும்ப நண்பரும் பத்திரிகையாளருமான சத்யராஜுடனும், அவரது மகள் மெஹ்ரீன் பிரிஸாடாவுடனும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல முயற்சிக்கிறார். விஜய் தேவார கொண்டாவின் முன்னேற்ற முயற்சி பலிதமானதா? சிறை சென்ற நாசர் திரும்பி வந்தாரா..? என்னும் இன்னும் பல வினாக்களுக்கு விடையளிக்கும் கதையம்சத்துடன், ஹவாலா சாமியார், எம்எல்ஏக்கள் சிறை வைப்பு, அரசின் மெத்தனம் – சென்னை வெள்ள சேதம், மாஜி முதல்வரின் மருத்துவமனை மறைப்பு சமாச்சாரங்கள்…. உள்ளிட்ட கரண்ட் பாலிடிக்ஸ் மேட்டர்களையும் கலந்து கட்டி “நோட்டா”வை ரசிகனைக் காட்டிலும் பொலிடீஷியன்ஸ் அதிகம் “நோட்” பண்ணும்படி காட்சிப்படுத்தி சுவாரஸ்ய படுத்தியிருக்கின்றனர்.

கதாநாயகராக, இளம் முதல்வர் வருணாக விஜய் தேவர கொண்டா, தான், தெலுங்கு முகம் என்பது தெரியாத அளவிற்கு பர்பாமென்ட்ஸ் காட்ட முயன்றிருக்கிறார். ஆனால், அவரது முகத்தில் காட்டப்படும் ஆக்ரோஷ எக்ஸ்பிரஸன்கள் அடுத்தடுத்த காட்சிப்படுத்தல்களில் ஆக்ஷன் சீன்களாக வடிக்கப்படாதது சீன் பை சீன் அப்பட்டமாய் தெரிகிறது.

அதையும் தாண்டி, முழு நேர அரசியல்வாதி ஆகிட்டீங்க போல… என ஒரு காட்சியில் கேட்கும் சத்யராஜிடம், ஆமாம் பின்னே, கப்பலில் வேலை பார்ப்பவனுக்கு நீச்சலும் தெரியணும் சார் உங்க ப்ரண்டு கிட்ட சொல்லுங்க… என அவர் பாணியிலேயே பதில் அளிக்கும் இடத்திலும், தன் கட்சிக்காரர்களால் எரிக்கப் படும் பேருந்தினுள் ஒரு பள்ளிக் குழந்தை சிக்கி இறப்பதை பார்க்க வரும் இடங்களிலும் மனிதர்… லயிக்க வைக்கிறார்.

நாயகியாக பத்திரிகையாளர் சத்யராஜின் மீடியா மகளாக வரும் மெஹ்ரீன் பிரிஸடாவிற்கு கதாநாயகியாக ஹீரோவை காதலிப்பது உள்ளிட்ட எந்த ஒரு பெரிய வேலையும் இல்லை… என்றாலும் தன் அழகால் ரசிகனை வசீகரிக்கிறார்.

வழக்கம் போலவே சத்யராஜ், நேர்மையான பத்திரிகையாளர் மகேந்திரனாக வாழ்ந்திருக்கிறார். ஊழல் முதல்வர் நாசர், நடிகராகவும், முதல்வராகவும் யார், யாரையோ பிரதிபலிக்கிறார்.

முதல்வர் நாசரின் விசுவாசி பாயாக வரும் எம்.எஸ் பாஸ்கர், விஜய் தேவராவின் அஜால் குஜால் நண்பர் கருணாகரன், இரண்டே இரண்டு சீனில் குட்டை டிரவுசர் சகிதம் “பிக்பாஸ்” யாஷிகா, எதிர்கட்சி இளம் பெண் தலைவி கயல் மற்றும் விஜய்யின் குட்டி தங்கை… முறையே அனஸ்தஸ்யா மஸ்லோவா, சஞ்சனா நடராஜன், பிரியதர்ஷி புலிகொண்டா, உள்ளிட்டோருடன் நட்புக்காக ஒரே ஒரு காட்சியில் வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆகிய அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

ஷான் கருப்புசாமியின் கதை கரண்ட் பாலிடிக்ஸ் பேசியிருப்பது ரசனை. ஆனால், அந்த கதை, போதிய அளவு பொலிட்டிக்கல் சட்டையர் படமாக காட்சிப்படுத்தப்படாதது வருத்தம்.

ரேமான்ட் டெரிக் கிறிஸ்டாவின் படத்தொகுப்பைக் காட்டிலும் சென்சாரில் நிறைய போயிருக்கும் போல…. அதனால், படத்தில் ஒரு கோர்வை இல்லாதது பலவீனம். சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரனின் ஒவியப்பதிவான ஒளிப்பதிவு பெரும் ஆறுதல்.

சாம் சி.எஸ்.ஸின் இசையில், “ராஜ ராஜ குலராஜா…” உள்ளிட்ட பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை பிரமாதம்.

“நோட்டா” எனும் நோட்டபிள்டைட்டில் பெரும் பலம்…. என்றாலும், “நோட்டா” எனும் டைட்டில் சம்பந்தமாக படத்தில் ஒரு சீன்கூட இல்லாததும், கைதட்டி ரசிக்கப்பட வேண்டிய கரண்ட் பாலிடிக்ஸ் சமாச்சாரங்கள்… பாசிங் கிளவுட்ஸாக படத்தில் பாஸாவது மாதிரியான காட்சிப்படுத்தல்களும் சற்றே பலவீனம்.

ஆனந்த்சங்கர் இயக்கத்தில், “நோட்டா” படத்தில், தேர்தல்களத்தில் மிகவும் பிரபலமான அந்த “நோட்டா” எனும் டைட்டில் சம்பந்தமாகபடத்தில் ஒரு சீன்கூட இல்லாததும் (ஒருவேளை, சென்சார்சிதைத்து விட்டதோ? என்னவோ.?!), நின்று நிதானமாக சொல்லப்பட்டு, கலர்புல் காட்சிகளாக வைக்கப்பட்டு கைதட்டி ரசிக்கப்பட வேண்டிய நம்மூர் பாலிடிக்ஸ் சமாச்சாரங்கள்… அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலமாக படமாக்கப்பட்டிருக்கும் விதம், இப்படம் ஏகத்திற்கும் எதிர்ப்புகளை சந்தித்தது, எதிர்பார்க்கப்பட்டதை பூர்த்தி. செய்யும் அளவிற்கு இல்லையோ..? எனும் சந்தேகத்தை கிளப்புகிறது.

மேலும், ஒரு முதல்வர் மீடியாக்கள் கேமிரா முன் ஒப்பனாக கேவலமாக கெட்ட வார்த்தைகள் பேசுவதும், கவர்னர் வீட்டில் தான் பதவி ஏற்ற முதல் நாளே, கவர்னரிடம், “நைட் அடிச்சது இன்னும் க்ளியர் ஆகலை… டீ-காபி வேண்டாம் மோர்… பெட்டர்.” என்பதும் பெரும் அபத்தமான, ஆபத்தான காட்சிகள்.

அதே மாதிரி, படம் முழுதுமான காட்சிகளிலும், காட்சிப்படுத்தல்களிலும் ஏகப்பட்ட ஜம்பிங் குழப்பங்கள், குளறுபடிகள்… குறிப்பாக, நாயகர் இளம் முதல்வர் வருண் – விஜய் தேவர கொண்டாவின் அப்பா, நாசர் உடல் நலம் தேறி மீண்டும் முதல்வராக பதவி ஏற்க விரும்பி காய் நகர்த்தும் தருணத்தில், சி.பி.ஐயும், விஜய் தேவர கொண்டாவை கைது செய்யத் தேடும் இருத்தரப்புக்கும் டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிடும் ஹீரோ மீண்டும் முதல்வராக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அப்பா நாசரை ஜெயித்து பதவியை பிடிப்பார். அப்பொழுது அவர் மீதான சிபிஐ கைது என்னவாயிற்று..? என்பதற்கு படத்தில் இறுதி வரை விடையேதும் இல்லை… இது மாதிரி படத்தில் எக்கச்சக்க விஷயங்கள் ஆங்காங்கே மிஸ்ஸிங்!

ஆக மொத்தத்தில், “நோட்டா’ – ஒரு முறை பார்க்கலாம் ‘பேட்டா!”

Rating: 3/5