New Year - Vehicle Checking
New Year - Vehicle Checking

New Year – Vehicle Checking – சென்னை: புத்தாண்டை கொண்டாட்டத்தில், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்துமாறு டிஜிபி ராஜேந்திரன் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வரும் ஜனவரி 1 , புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து,

தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘பேருந்து நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சந்தேகிக்கும் வகையில் அமையும் வாகனங்களை சோதனையிட தனி போலீஸாரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது’.

மேலும் தொடர்ந்து அவர்களை கண்காணிக்கவும், சந்தேகமான நபர்களைப் பிடித்து விசாரித்து, உடனே அதுகுறித்த தகவலை தலைமையிடத்துக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு வரை வாகன சோதனையை தீவிரப்படுத்த அனைத்து போலீஸாருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு குவிந்துள்ளனர்.

இதனிடையே தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஜனவரி 1-ம் தேதி இரவு வரை தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.