சென்னை வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் 5 வது தெருவை சேர்ந்தவர், வெங்கண்ணா. இவர் மனைவி, உமா (26). கடந்த 5ஆம் தேதி வீட்டில் பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தை , மறுநாள் காலை மாயமாகி இருந்தது. இதையடுத்து, யாரோ கடத்தி சென்றுவிட்டதாக வேளச்சேரி போலீசில் உமா புகார் அளித்திருந்தார் .

இதுகுறித்து, புகாரின் பேரில் அடையாறு துணை கமிஷனர் சேஷாஷய் சாய், கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரிக்க சென்றனர்.

நள்ளிரவில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் சென்றதாக அந்த வழியாக சென்ற ரோந்து போலீசார் தெரிவித்தனர். பிறகு, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தபோது குழந்தையுடன் சென்ற பெண்ணின் உருவம் உமாவை போல தெரிந்தது.

இதையடுத்து, உமாவின் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் உமாவை துருவி துருவி விசாரித்ததில், தனது குழந்தையை தானே ஏரியில் வீசி விட்டு, கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.

10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை, தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.