திரைப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் கலப்பு: மணிரத்னம் தெளிவுரை
‘எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்’ என விளக்கம் அளித்துள்ளார் மணிரத்னம். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
‘தமிழ் சினிமாவில் தற்போது பாடல்களும், அதில் உள்ள வரிகளும் பலருக்கும் புரிவதில்லை. வலைதளங்களில் சில நாட்கள் டிரெண்டாவதோடு சரி. நிலைத்து நிற்பதில்லை. மேலும், ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்புகளும் பாடல்களின் அழகையே கெடுத்து விடுகின்றன’ என்ற கருத்துகள் பெருகி வருகின்றன.
இதுகுறித்து, இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘தற்போது தமிழ்ப் பாடல்களில் தமிழைக் கேட்க முடிவதில்லை. முந்தைய காலத்தில் தமிழில் இருந்து பாடல்களை ஹிந்திக்கு கேட்டு வாங்கும் சூழல் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறிவிட்டது. தமிழ்ப் பாடல்கள் தற்போது ஆங்கிலக் கலப்புடன் அர்த்தமற்று விளங்குவதாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மணிரத்னம், ‘என்னுடைய பெரும்பாலான படத்தின் தலைப்புகள் தமிழில் தான் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு கமல்ஹாசன் தலைப்பு வைத்துள்ளார். அவர்தான் பொறுப்பு.
எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். ரகுமானும் நானும் தமிழ் இலக்கியத்திலிருந்து நிறைய கவிதைகளை எடுத்து பாடல்கள் ஆக்கியுள்ளோம். இளம் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக ஆங்கிலப் பாடல் வரிகள் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் மறுக்கிறேன். அது மட்டுமே ஒரு படத்தை ஓட வைக்காது. அது மட்டுமே, ஒரு நல்ல படத்தை உருவாக்கி விடாது. நல்ல கதாபாத்திரங்களை அமைத்தால் மட்டுமே அது ஒரு கதைக்கு உதவும். பாடல்களோ தலைப்போ ஒரு படத்தை ஓட வைக்க உதவாது’ என கூறினார்.