அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் சிம்பு மீண்டும் பத்து தல படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

ரசிகர்களால் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை அதிகரித்த காரணத்தால் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்துக் கொண்டு “மாநாடு” என்ற படத்தின் மூலம் மாசான ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் சிம்பு தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ என்ற கௌதம் மேனனின் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு “பத்து தல” திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடிகர் சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனருமான டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருடன் நடிகர் சிம்பு அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். தற்போது சிகிச்சை பெற்று வந்த டி.ஆர்.ராஜேந்திரனுக்கு உடல்நிலை சீராகி விட்டதால் இருவரும் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

மீண்டும் சென்னை திரும்பிய சிம்பு தனது பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொண்டு தீவிரமாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சிம்புவின் ரசிகர்கள் அவர் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருப்பதை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.