“நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மென்ட்” பேனரில், நீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில், மனோஜ் கிருஷ்ணாவின் இணை தயாரிப்பில் ராஜ்குமார் – ஸ்ரிஜிதா ஜோடியுடன், நாகேந்திர பிரசாத், கே.பாக்யராஜ், ஊர்வசி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, மனோபாலா, ராம்கி, கலா மாஸ்டர், சஞ்சய் அஸ்ரானி, பிரியதர்ஷினி, ரம்யா, மலேசிய பொன்கோகிலம், பரத் கல்யாண், சன் டிவி ஆடம், ஸ்நிதா, விஜய் டிவி பேம், சரத், முல்லை & கோதண்டம்… உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் நடித்திட, A.L.வெங்கி இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் முழு நீள டான்ஸ் சப்ஜெக்ட் படம் தான் “கூத்தன்”.

கதைப்படி, சென்னையில் ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டிங்கை அகற்றாமல், சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அப்பகுதியில் வசித்து வரும் துணை நடிகையான ஊர்வசியின் மகன்தான் நாயகன் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நடன குழுவை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கலைஞர்களுக்காக கொடுத்த இடத்தை கேட்கிறார் தயாரிப்பாளரின் மகன். தான் பண நெருக்கடியில் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுத்தால் பணப்பிரச்சனை தீரும் என்றும் கூறுகிறார். ஆனால் சினிமா கலைஞர்களுக்கோ அந்த இடத்தை விட்டு போக விருப்பம் இல்லை. அதேசமயம், தங்களுக்கு இடம் கொடுத்த தயாரிப்பாளர் மகனையும், வெறுங்கையோடு அனுப்ப மனம் இல்லை. அதனால், தாங்கல் 1 1/2 கோடி மதிப்புடைய அந்த இடத்திற்கு 1 கோடி பணத்தை திரட்டிக் கொடுக்கிறோம் என்று நாயகர் ராஜ்குமார் கூறுகிறார்.

அதன்படி உலகளவில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு பல கோடி பணத்தை திரட்ட தயாராகும் ராஜ்குமார், வெற்றி பெற்றால் கோடிக் கணக்கில் பணம் தீவிர முயற்சி செய்கிறார். மற்றொரு பக்கம் பரத நாட்டியத்தில் ஆர்வம் கொண்ட நாயகி ஸ்ரிஜிதா. இவரின் ஒரே லட்சியம் சென்னையின் பிரபல நடன கலைஞராக இருந்து கிருஷ்ணா டான்ஸ் அகாடமி நடத்தி வரும் நாகேந்திர பிரசாத்தை தோற்கடிப்பது. நாயகன் ராஜ்குமாருக்கும் நாயகி ஸ்ரிஜிதாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஸ்ரிஜிதாவும் பணப்பிரச்சனையில் இருக்கிறார். இருவரும் நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று இணைந்து முயற்சிக்கிறார்கள்.

இறுதியில் நாயகர் ராஜ்குமாரும், நாயகி ஸ்ரீஜாவும் அந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று கலைஞர்களுக்கான சினிமா நகர் பகுதியை கைநழுவி போகாது செய்தனரா? நாயகி ஸ்ரிஜிதாவின் பணப் பிரச்சினை தீர்ந்ததா..? நாயகியின் பணப் பிரச்சினைக்கு யார் காரணம்? டான்ஸர் நாகேந்திர பிரசாத் மீது நாயகியின் கோபத்திற்கு காரணம் என்ன? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது “கூத்தன்” படத்தின் மீதிக்கதையும், களமும்!

படத்தின் நாயகராக நடித்திருக்கும் இளைஞர் ராஜ்குமார், அம்சமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடன திறமையை காட்டியிருக்கிறார். சற்றே பால் வடியும் முகத்துடன் தெரியும், திரியும்… இவர், நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் பெரிய இடம் பிடிக்கலாம்.

முதல் கதைநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரிஜிதா மாதிரியே இரண்டாம் மூன்றாம் நாயகியராக நடித்திருக்கும் சோனால், கீரா ஆகியோர் தங்கள் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். அதில் முதல் நாயகி ஸ்ரிஜிதா, தன் உதட்டு சாயத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். வில்லனின் முகத்தில் கரியை பூசுவேன்.. இவர் உதட்டில் சிவப்பு சாயம் பூசியிருப்பது ரசிகனின் கண்களை உறுத்துகிறது!

பெரிய இடைவெளிக்குப் பின் பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் திரையில் தோன்றி ரசிகர்களை தன் நடனத்திறமையால் ஈர்த்திருக்கிறார்.

கே.பாக்யராஜ், ஊர்வசி, ரேணுகா மூவரும் முருங்கைக்காய் சீனால் மூடு ஏற்றுகின்றனர்.

மற்றபடி, கெஸ்ட் ரோலிலும், தங்களது பெஸ்ட்ரோலிலும் இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி, மனோபாலா, ராம்கி, கலா மாஸ்டர், சஞ்சய் அஸ்ரானி, பிரியதர்ஷினி, ரம்யா, மலேசிய பொன்கோகிலம், பரத் கல்யாண், சன் டிவி ஆடம், ஸ்நிதா, விஜய் டிவி பேம், சரத், முல்லை & கோதண்டம்… உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பிரமாதப்படுத்தியிருக்கின்றனர். பேஷ், பேஷ்!

அஷோக் ராஜாவின் நடன அமைப்பு இந்த டான்ஸ் சப்ஜெக்ட் படத்திற்கு பெரும் பலம். பீட்டர் பாபியாவின் படத்தொகுப்பு, பின் பாதியில் பிரமாதம். மாடசாமியின் ஒவிய ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பலே , பலே!

பால்ஜியின் இசையில், டி.ஆர் பாடி ஹிட் அடித்த,”மங்கிஸ்தா கிங்கிஸ் தா…” மற்றும், “ஓடு ஓடு காதல் காட்டுமிராண்டி…”, “தீராத தீண்டல்கள்…”, “சொல்லாத…”, “கூத்தனம்மா கூத்து….” உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் டான்ஸ் மியூசிக்கல் என்பது ஆறுதல்!

நடனத்தை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் A.L.வெங்கி என்பது சிறப்பு.

A.L.வெங்கி இயக்கத்தில், படத்தில் ஒரு சில நடனக்காட்சிகள் மெய்சிலிர்க்கும் படி இருந்தாலும், முன் பாதி பிற காட்சிப் படுத்தல்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருந்தால், பின் பாதி வெயிட்டான கதைக்களம் மேலும் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்… இயக்குனர் என்பது ஆறுதல்!

மொத்தத்தில் “கூத்தன்’ ‘நடன ஜித்தன்’ – ‘ரசிப்பான் ரசிகன்!”