கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த லேட்டஸ்டான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இப்படம் குறித்த புதிய தகவலை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு இருக்கிறார்.

இப்படத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்த காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தேதியை அறிவித்துள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்டத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு உறுதி செய்ததை தொடர்ந்து சில பல காரணங்களால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது.

இதற்கிடையில் கர்ப்பமான நடிகை காஜல் அகர்வால் மீண்டும் படத்தில் நடிக்க வருவாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. மேலும் இப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகவும் சில தகவல் பரவி இருந்தது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்க இருப்பதை இன்ஸ்டாகிராம் லைவ் பேசி உறுதி செய்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கும் என்ற அப்டேட்டையும் கொடுத்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் திருமணத்திற்கு பிறகும் நடிகை காஜல் நடிக்கவுள்ளார் என்பதால் அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.