‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம்: தணிக்கை வாரியம் ஐகோர்ட்டில் சொன்ன தகவல்..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9-ந்தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இதுவரை ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ந்தேதி படத்தை பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான கே. வி.என்.புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.டி. ஆஷா முன்பு நடைபெற்றது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஸ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, சில காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், பிறகு மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சி உள்ளதாக கூறி மறு ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் வாதிட்டனர்.
மேலும், ‘படத்தை வெளியிட குறுகிய நாட்கள்தான் உள்ளன. மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து பார்த்து உரிய முடிவு எடுக்க வேண்டும். மூன்று மொழியில் படத்தை திரையிட வேண்டும்’ என்று அவர்கள் கூறினர்.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தை மீண்டும் ஆய்வு செய்ய மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அவர்கள் ரிலீஸ் தேதியை நிர்ணயத்தாலும் சட்டப்படி தான் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை இன்று ஜனவரி 7-ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
