குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ்?
விஜய் நடிப்பில் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஜனவரி 9-ந்தேதி ரிலீஸ் செய்ய அறிவித்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் இருந்ததுடன், மறு ஆய்வு குழுவுக்கு படத்தை பரிந்துரை செய்தது தணிக்கை வாரியம்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் நிறுவனம். அந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ந்தேதி வழங்கப்படும் என தனி நீதிபதி பி.டி. ஆஷா தெரிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்கள்.
ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பும் பரிந்துரையை ரத்து செய்ததுடன், உடனே அதற்கு யு/ஏ சான்று வழங்குமாறு உத்தரவிட்டார் நீதிபதி ஆஷா. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே அதை எதிர்த்து மேல் முறையீட்டு் மனு தாக்கல் செய்தது தணிக்கை வாரியம்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அமர்வு, தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். நிறுவனம். தங்களின் கருத்தை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.
தயாரிப்பு நிறுவனத்தின் மனு ஜனவரி 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றமோ, இந்த விஷயத்தை உயர் நீதிமன்றத்திலேயே அணுகுமாறு உத்தரவிட்டது. மேலும் ஜனவரி 20-ந்தேதியே ஜனநாயகன் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.
ஜனவரி 20-ந்தேதி ஜனநாயகனுக்கு உகந்ததாக தீர்ப்பு வந்தால் இனியும் தாமதம் செய்யாமல் ஜனவரி 26-ந்தேதி அதாவது குடியரசு தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று கே.வி.என். நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பு தங்களுக்கு சாதமாக வரவில்லை என்றால், அடுத்து என்ன செய்வது என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

