பிரின்ஸ் படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் அந்த படம் குறித்த உருக்கமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம்பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். படிப்படியாக வளர்ந்து உச்சத்தை தொட்டுள்ள இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ்.

தெலுங்கு இயக்குனர் அனதீப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சத்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஈரான் நாட்டு அழகி நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் பெரும்பாலானோர் படம் நன்றாக இருப்பதாகவே கூறினர்.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படம் பற்றி ஒரு உருக்கமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதாவது அந்தப் பதிவில் ப்ரின்ஸ் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. மிகச்சில குளறுபடிகள் சிறுபிள்ளைத் தனமான காட்சிகளைத் தாண்டி ரசிக்கும் படியே இருந்தது. பல நாட்களுக்கு பிறகு ஜாலியான காமெடிப்படம். ஆனால் இங்கே பரப்பப்படுகிற வெறுப்புக்கும் தூற்றுதலுக்கும் படம் அத்தனை மோசமில்லை. சொல்லப்போனால் நான் பார்த்த கிருஷ்ணவேணி தியேட்டரில் அரங்கம் அதிர மக்கள் சிரித்துக்கொண்டுதான் இருந்தனர்.

தமிழ் சினிமாவில் வெட்டுக்குத்து, லிட்டர் கணக்கில் ரத்தம், பீரங்கிகள் துப்பாக்கிகள், குறியீடுகள், கோட்பாடுகள், இல்லாமல் அவ்வப்போது இதுபோன்ற மென்வகை படங்களும் வரவேண்டும். வருகிற வெற்றியடைகிற படங்கள் எல்லாமே சீரியஸான போலீஸ் திருடன் டாரன்டினோ குரோசாவா படங்களாக அல்லது உலகசினிமா குறியீட்டு படங்களாவே இருந்தால் கொஞ்சம் சிரிக்கவும் பொழுதுபோக்கவும் கூட படங்கள் வேண்டுமில்லையா. Afterall சினிமாவின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றல்லவா பொழுதுபோக்கு. சமூக வலைதளங்களின் வருகைக்கு பிறகு ரொமான்ஸ் காமெடி த்ரில்லர் மாதிரி ஜானர்களே தமிழ் சினிமாவில் அழிந்து விட்டது. எல்லோருமே ஹை கான்செப்ட் படங்களாக எடுக்கப்பட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் சினிமாவில் மிச்சமிருப்பது இரண்டே ஜானர் தான். ஒன்று உலக சினிமா அல்லது பிரம்மாண்ட சினிமா. அவ்வப்போது காஞ்சனா, டாக்டர், ப்யார் ப்ரேமா காதல் வகையறா படங்களும் வந்து வெற்றியடைய வேண்டும். தமிழர்களுக்கு காதலிப்பது காதல் பற்றி படங்கள் பார்ப்பது அலுத்துவிட்டதா தெரியவில்லை. காதல் மீதும் என்னமோ ஒரு வெறுப்பு வந்துவிட்டதை போல இருக்கிறது. 90ஸ் கிட்ஸ்கள் காரணமாயிருக்குமோ என்னமோ. ப்ரின்ஸ் ஏன் சிலருக்கு பிடிக்காமல் போனது என்பதற்கான காரணங்களை யோசித்தேன். படத்தில் காட்டப்படுவது போல நமக்கு இங்கிலாந்தின் மீதோ அம்மக்களின் மீதோ வெறுப்பெல்லாம் கிடையாது. கிரிக்கெட்டில் கூட நமக்கு இங்கிலாந்து பிரதான எதிரி இல்லை. நிறைய முறை அடிவாங்கி வாங்கி ஆஸ்திரேலியா கூட எதிரியாக இருக்கலாம், ஆனால் இங்கிலாந்து நமக்கு நெருக்கம் தான். இன்னும் இந்த தலைமுறை மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியே பெட்டர் என்கிற எண்ணமெல்லாம் உண்டு. பெனடிக்ட் கும்பர்பாட்ச்சுக்கு எங்க முகப்பேரில் ரசிகர் மன்றமே இருக்கிறது. ஜோஸ்பட்லருக்கு எத்தனை ரசிகர்கள் உண்டு. எலிசபெத் ராணி இறந்து போன போது இங்கேயும் கூட பலரும் தன்னுடைய பாட்டியே முக்தியடைந்தது போல உணர்ச்சி வசப்பட்டார்கள்.

ப்ரின்ஸில் இங்கிலாந்து பெண்ணுக்கு பதிலாக ஒரு பாகிஸ்தான் பெண்ணை நாயகியாக வைத்திருந்தால் காட்சிகள் இன்னும் கனமாக மாறி இருக்கும். அதனாலேயே பல காமெடிகளும் காட்சிகளும் வலுவாக இல்லாமல் போயிருக்கிறது. இங்கிலாந்து இந்தியா மேட்ச் நடக்கும்போது நாயகன் கொண்டாடுகிறான் என்கிற காட்சியை விட அது இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சாக இருந்திருந்தால் சுவாரஸ்யப்பட்டிருக்கும். பாகிஸ்தான் மீதும் அங்கிருக்கிற மக்கள் மீதும் நமக்கு இருக்கிற (திணிக்கப்பட்ட) வெறுப்பை அடிப்படையாக வைத்து கதை பண்ணியிருந்தால் படத்தின் அடிப்படை முரணுக்கு கூடுதல் வலு சேர்ந்திருக்கும். பாகிஸ்தானிலேயே பிறந்து வளர்ந்து இங்கே வாழ்கிற எத்தனையோ குடும்பங்கள் இந்தியாவில் உண்டு. ‌ தேசபக்தியை வைத்து அரசியல்வாதிகள் ஆடுகிற கேடுகெட்ட ஆட்டத்தையும் பகடி பண்ணி இருக்கலாம். பாகிஸ்தான் பெண்ணை நாயகனோடு நாமும் ஏற்றுக்கொண்டிருந்தால் படத்தில் வருவதைப்போல ஹ்யூமானிட்டி மலர்ந்திருக்கும். இந்த தேசத் தேர்வு தான் இயக்குநர் சறுக்கிய இடமாகப்படுகிறது.

இன்னொன்று சிவகார்த்தியேனுக்கு இது கம்மிங்க என்கிற பரவலான கருத்தை கேட்க முடிந்தது. சீமராஜா வேலைக்காரன் மாதிரி படங்கள் பண்ணும்போது இது அவருக்கு அதிகம்ங்க என்றனர். அவர் என்ன செய்தாலும் தராசு வைத்து அளந்து அளந்து அதிகம் கம்மி என குற்றம் கண்டுபிடிக்கிற ஆட்கள் அதிகமாகி விட்டார்கள். உண்மையில் இவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிற வேறு எந்த ஹீரோவும் இவ்வளவு விதவிதமான திரைப்படங்களில் ஜானர்களில் நடிப்பதில்லை. பெரிய நாயகர்கள் எல்லோருமே போலீஸ் அல்லது கேங்ஸ்டர் என இரண்டே ஜானர்களில் பாதுகாப்பாக மாறி மாறி நடிக்கும்போது சிவகார்த்திகேயன்தான் வெவ்வேறு ஜானர்கள் வெவ்வேறு விதமான பாத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார். சூப்பர்ஹீரோ பண்ணுகிறார், சைன்ஸ்பிக்சனில் நடிக்கிறார், சீமராஜாவிலும் கூட வரலாற்று விஷயங்கள் சேர்த்திருப்பார்கள். தன்னால் முடிந்தவரை எல்லாவகை படங்களையும் முயற்சி செய்து பார்க்கிறார். ரஜினிகாந்த் பில்லா ரங்கா என ஆக்சன் படங்களாக நடித்துக் கொண்டிருந்த போது தான் கொஞ்சம் கூட ஹீரோயிசம் இல்லாத தில்லு முல்லுவில் நடித்தார். ப்ரின்ஸ் கூட அவ்வகை தான்.சிவகார்த்திகேயனின் முயற்சியையும் அப்படி தான் பார்க்கிறேன். ஆனால் அவர் மீதான இந்த கூட்டுவன்மம் எங்கிருந்து எப்படி ரசிகர்கள் மத்தியில் உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது என்பது புரியவில்லை.

கூட்டுவன்மம் என்பது நம் காலத்தின் சாபக்கேடு. ஒன்று சுமாராக இருந்தால் கூட அதை அடித்து துவைத்து அதில் மகிழ்கிற மாப் மென்டாலிட்டி பெருகிவிட்டதாக நினைக்கிறேன். அஞ்சான் காலத்தில் தொடங்கிய ஆட்டம் இது. இன்று பல்கி பெருகிவிட்டது. ப்ரின்ஸிலும் இதுவே இயங்கியிருப்பதாக படுகிறது. ஒரு திரைப்படத்தின் முதல் காட்சி தொடங்கி முன்தீர்மானத்தோடு படத்தை அணுக நாம் நிர்பந்திக்கப்படுகிறோம். ஒரு படம் பிடிக்கிறது பிடிக்காமல் போகிறது என்பதை தாண்டி அதையொட்டி சமூகம் அல்லது சமூக வலைதளகள் உருவாக்குகிற கருத்தாக்கத்திற்கு வலுசேர்க்க விளைகிறோம். நிச்சயமாக ப்ரின்ஸ் டிவிகளில் சக்கைபோடு போடும். சீமராஜாவும் ஆல்இன்அழகுராஜாவும் கூட அப்படித்தான் தியேட்டர்களை விட டிவிக்களில் ஓடோ ஓடென்றோடியது என குறிப்பிடப்பிட்டுள்ளார்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02EgEYbkoTmBXNSqyknMbMiBoWbmpZbHwQqdfmSXkceYprdENQojFUDE3vuxhsiWPTl&id=100038530955909

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.