தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தொடங்க இருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இதில் பிரபல தெலுங்கு நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள ’நானே வருவேன்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கான மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தை சாணிக் காகிதம், ராக்கி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். இதில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த தகவல்களை தொடர்ந்து புதிய தகவலாக இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நடிகர் சந்தீப் கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தின் ஹீரோவான இவர் தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்று பிரபல ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அதனால் இந்த படத்தில் சந்தீப் இணைவது இந்த படத்தின் தெலுங்கு வியாபாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் – இந்தியத் திரைப்படமாக இந்த படம் உருவாகவுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.