நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி”திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று படகுழு அறிவித்திருந்தது.

ஆனால் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட படகுழு திட்டமிட்டு இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாக இருந்த இப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.