மணிரத்னம் இயக்கத்தில், அவரது மெட்ராஸ் டாக்கீஸும், லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரனும் இணைந்து தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அரவிந்த்சாமி, எஸ்டிஆர், அருண் விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதீ ராவ்ஹைதரி, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, “மம்பட்டியான்” தியாகராஜன், டயானா எரப்பா, மன்சூரலிகான், சிவா ஆனந்த் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, வெளிவந்திருக்கும் கேங்ஸ்டார் கதையம்சமுடைய முழு நீள ஆக்ஷன் படம் தான் “செக்கச்சிவந்த வானம்.”

கதைப்படி, சென்னையை கலக்கும் மிகப்பெரிய டான் – பிரகாஷ் ராஜ். அவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, மனைவி ஜோதிகா, கள்ளக்காதலி அதீதி ராவ் ஹைதாரி மற்றும் குழுந்தைகளுடன் அப்பா பிரகாஷ் ராஜின் தொழிலுக்கு பக்கபலமாக சென்னையிலேயே இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய், துபாயில் இலங்கையை சேர்ந்த காதல் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குழந்தைகளுடன் செட்டில் ஆகி, ஷேக்குகளுடன் சேர்ந்து ஏதோ சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்து அப்பாவின் சப்போர்ட்டில் சம்பாதித்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்பு செர்பிய நாட்டில் காதலியுடன் கள்ளச்சந்தையில், துப்பாக்கிகளை வாங்கி விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்.

சென்னையை கலக்கும் பிரகாஷ் ராஜ்க்கும், அவருக்கு போட்டி தாதாவான தியாகராஜனுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரகாஷ் ராஜ் மனைவியுடன் காரில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது, அவர் காருக்குள் வெடிகுண்டு வீசப்படுகிறது. இதில் உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பிரிவில் பிரகாஷ்ராஜும், ஜெயசுதாவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதையறிந்த அருண் விஜய்யும், சிம்புவும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வருகிறார்கள். மகன்கள் மூன்று பேரும், அப்பாவின் இந்த நிலைக்கு யார் காரணம்? யார் காரணம்..? என்று அரவிந்தசாமியின் பால்ய காலத்து நண்பரும் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் இன்ஸ்’ஸுமான விஜய் சேதுபதி துணையுடன் துப்பறிவில் இறங்கி, எதிராளி தியாகராஜன் தான் காரணம்… என அவர் மருமகனை போட்டுத் தள்ளி, அவர் இல்லை எனத் தெரிந்ததும், ஒய்ந்து, அவரவர் வேலையைப் பார்க்க போக, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரகாஷ் ராஜ், திடீர் நெஞ்சுவலியால் உயிரிழக்கிறார்.

அதன் பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவது? என்று மகன்கள் மூன்று பேருக்குமிடையில் போட்டி ஏற்படுகிறது. இந்த போட்டியில், ஒருவரை ஒருவர்… உற்றார், உறவுக்காரர்…. எனப் பார்க்காமல் போட்டுத் தாக்கிக் கொள்ள, இறுதியில் வெற்றி பெற்றது யார்? என்பதை வித்தியாசமும், விறுவிறுப்புமாக சொல்ல முயன்று அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறது “செக்கச்சிவந்த வானம்” படத்தின் மீதிக்கதையும், களமும் ஆகும்.

படத்தில் பிரகாஷ்ராஜின் மூத்த மகனாக, வர்தனாக நடித்திருக்கும் அரவிந்த் சாமி, சிறப்பான நடிப்பை செம்மயாக காட்டி இருக்கிறார். சென்னையில் தந்தையுடனே பயணிக்கும் இவர், தந்தை மற்றும் தமையன்களையையே பதவிக்காக போட்டுத் தள்ளதுணிவதும் நான் தான் அடுத்த தாதாவிற்கு தகுதியானவன்… என்று இரு மாப்பில் திரிவதும் மட்டும் அதற்கு மனைவி ஜோதிகா துணையாக இருப்பதும் நம்பும் படியாக இல்லை. மற்றபடி அரவிந்த்சாமியின் நடிப்பு டபுள் ஓ.கே.

பிரகாஷின் இரண்டாவது மகனான தியாகு – அருண் விஜய், துபாய் ஷேக்குகளுக்கே போக்கு காட்டும் தனது துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை வழக்கம் போலவே கவர்ந்திருக்கிறார். அதே நேரம், இவரை எதிர்க்கவே செய்யாத சிம்புவின் காதலியை இவர் ஆள் வைத்து தீர்த்து கட்டுவதும் அபத்தம்.

பிரகாஷ்ராஜின் மூன்றாவது மகனாக எஸ்டிஆர் – சிம்பு எக்கச்சக்கமாக காதலி டயானாவுடனும், அண்ணன் அர்விந்த்சாமியின் கள்ளக்காதலி அதீதிராவுடனும் இளமை துள்ளலுடன் புகுந்து விளையாடி இருக்கிறார்.

அரவிந்த் சாமியின் பள்ளி பருவ நண்பராகவும், தாதாயிஸம் பிடிக்காத போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் குடும்பத்தின் கூடவே இருந்து போட்டு தாக்கியிருக்கிறார்.

இவர்கள் எல்லோர்க்கும் மேலாக தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பால் கிழட்டு கேங்ஸ்டாராக கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறார் டான் சேனாபதி – பிரகாஷ் ராஜ். அவரையும் தாண்டி, அவ்வளவு வேலை இல்லை என்றாலும், போட்டி தாதா சின்னப்பதாஸாக “மம்பட்டியான்” தியாகராஜன், அசால்ட்டாக நடித்து, சபாஷ் சொல்ல வைக்கிறார்.

அரவிந்த்சாமியின் மனைவி சித்ரா வாக வரும் ஜோதிகா, அர்விந்தசாமியின் கள்ளக்காதலி ‘கம்’ மீடியா லேடியாக வரும் அதிதிராவ், அருண் விஜய்யின் மனைவியாக இலங்கை தமிழச்சி ரேணுவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் காதலி சாயாவாக வரும் டயானா எரப்பா, பிரகாஷ்ராஜின் மனைவி ஜெயசுதா… ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொஞ்ச, கொஞ்ச நேரத்தில் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடிக்கும்படி கதாபாத்திரத்தை உணர்ந்து விஞ்சி, மிஞ்சி நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது திரையில் பார்க்கும் போது புரியவில்லை என்றாலும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. பின்னணி இசை இப்படத்திற்கு பெரும் பலம்.

ஸ்ரீகர் பிரசாத் தன் கத்திரியை கண்ட மேனிக்கு பயன்படுத்தி வேற லெவலில் படத்தை கொடுக்க நினைதிருக்கிறார். ஆனால், முடியவில்லை.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் ஆறுதலும், கூடுதல் பலமும் சேர்த்திருக்கிறது. பேஷ், பேஷ்!

பெரும் தாதாவான தந்தை இறந்த பிறகு, இல்லை, இல்லை… மகன்களே கொன்ற பிறகு… அந்த இடத்தை பிடிக்க நினைக்கும் மூன்று மகன்களின் போட்டா போட்டியை மையமாக வைத்து, தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், அதை இந்த காலத்திற்கு ஏற்ப படம் பிடிக்கிறேன்.. பேர்வழி என தான் வாழ்ந்திருக்க வேண்டிய கதை அமைப்பிலும், காட்சிப்படுத்தலிலும் நிறையவே வீழ்ந்திருக்கிறார்.

கேங் வாரே இல்லாது அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய காரணங்களே இல்லாது கன்வார் (துப்பாக்கி சண்டை) நடத்தி கேங்ஸ்டார் படம் தந்திருக்கும் மணிரத்னம் இன்னும் நிறைய யோசித்து இந்தப் படத்தை எடுத்திருக்கலாம்.

“உனக்கு எதுவும் கிடையாது என் மற்ற இரண்டு பிள்ளைகளுக்கு தான் எல்லாம்… “என இப்படி எதுவும் சொல்லாத அப்பாவை அர்விந்தசாமி தீர்த்து கட்டி விட்டு பட்டம் சூடிக் கொள்ள முயல்வதும், தன் அப்பாவை தீர்த்து கட்டிய பிரகாஷ்ராஜுக்கு அவரது மனைவி ஜெயசுதாவும் சுதாவின் தம்பி சிவா ஆனந்தும் சப்போர்ட்டாக இருப்பதும், ஜோதிகா, தன் கணவர் அர்விந்தசாமி கள்ளக்காதலிக்கு காசு பணம் எதுவும் தருவதில்லை…. என அவரை கண்டிக்காமல் தண்டிக்காமல் விடுவதும், அண்ணன் தம்பிகளுக்குள் அப்பன் சொத்துக்காக ஒரு முறை கூட நேரடியாக சண்டையே வராமல் ஒருத்தரை ஒருத்தர் தீர்த்து கட்ட முயல்வதும், கட்டுவதும், தங்கள் குடும்பங்களை தாங்களே கொன்று குவிப்பதும், அதை போலீஸ் ப்ரண்ட் விஜய் சேதுபதி யூஸ் செய்து கொள்வதும், இறுதியில் எங்க அப்பாவும் ஒரு குட்டி கேங்ஸ்டார். அதனால அவர் செத்து போயிட்டார். அதனால எனக்கு கேங்ஸ்டார்களை பிடிக்காது என கதை சொல்வதும்… நம்ப முடியாத ‘ஹம்பக்’ டிராமாமாக்களாக இந்தப்படத்தை பலவீனப்படுத்துகிறது!

ஆனால், இத்தனை கேரக்டர்கள் நிரம்பிய கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கையாண்டு, கச்சிதமாக வேலை வாங்கி இருக்கிறார்…. இயக்குனர் மணிரத்னம் என்பதற்காக அவரை பாராட்டலாம்! அதே நேரம் மொத்தப் படத்தையும் மேற்படி, மறையாது, நிறைந்திருக்கும் லாஜிக் மிஸ்டேக் குறைகளால் பாராட்டவோ, சீராட்டவோ முடியாது என்பதே நிஜம்!

மொத்தத்தில் “செக்கச் சிவந்த வானம்’ – ‘சிவக்கவும் இல்லை… பெரிதாக சிறக்கவும் இல்லை!”

Rating: 3.5/5