சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனராக விளங்கி வருபவர் பி வாசு. இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் மாபெரும் சூப்பர் ஹிட் அடித்திருந்த திரைப்படம் சந்திரமுகி. இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதனை பி வாசு அவர்களே மீண்டும் இயக்க இதில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், கங்கணா ரனாவத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம்.எம் கீரவாணி இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக புகைப்படத்துடன் படக்குழு வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.