ADMK MPs Protest
ADMK MPs Protest

ADMK MPs Protest – ‘மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும்’, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. கடந்த 7 நாட்களாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் ரபேல் ஒப்பந்தம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், “மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்” .

மேலும், மக்களவையில் நேற்று காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர்.

இதனால் கடும் கோபம் அடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிமுக எம்பிக்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: ‘காவிரி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா? இவ்வாறு கூச்சலிடுவதன் மூலம் காவிரி விவகாரத்திற்கு தீர்வு எதையும் காண முடியாது..’ இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின், 8-வது நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னர் தமிழக அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.