
அதிமுக துவங்கி 47 ஆண்டுகள் ஆனதை மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதிமுகவை 1972- ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி எம்ஜிஆர் உருவாக்கினார்.
1977- இல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்றது. அதன்பின் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகே திமுகவால் ஆட்சியை பெற முடிந்தது. இதுவரை மொத்தம் 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இருந்து வருகிறது.
தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமை இதற்கு உள்ளது. எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 5 முதலமைச்சர்கள் அதிமுக நமக்கு தந்துள்ளது.
கட்சியின் முக்கிய தலைவரான எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு தற்போது இருக்கும் பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரின் தலைமையின் கீழ் இன்று அதிமுக துவங்கி 47- ஆம் ஆண்டின் தொடக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கள். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.