நடிகை அதிதி சங்கர் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் அதிதி சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கரின் மகளான இவர் கடந்த ஆண்டு தமிழில் கார்த்தியின் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த விருமன் திரைப்படத்தில் நடித்து அனைவருக்கும் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் நடிகை அதிதி சங்கர் சமீபத்திய பேட்டியில் அளித்திருக்கும் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், அப்பா ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆசையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மகளாக அப்பாவின் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பலமுறை சென்று இருக்கிறேன், ஆனால் ஒரு முறையாவது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். மேலும் அவரைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் மற்றும் லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.