நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மணி சர்மா இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வாடகை தாய் மோசடியை மையமாக வைத்து புதுமையாக உருவாகி இருக்கும் இப்படத்தை பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் நடிகை சமந்தா தனது twitter பக்கத்தில் ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், யசோதாவுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு, நான் பெற்ற சிறந்த பரிசு, இது போன்ற ஆதரவை இதுவரை பெற்றதில்லை என்றும், உங்கள் அன்பினால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, தியேட்டர்களில் பறக்கும் விசில்களே கடினமாக உழைத்த படக்குழுவுக்கான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.