வெங்கி அட்லுரிக்கு கால்சீட் தந்த சூர்யா, வெற்றிமாறனுக்கு தர மாட்டாரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் வெங்கி அட்லுரி என்றால், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் என்ன ஆயிற்று? என்பது பற்றிப் பார்ப்போம்..
‘ரெட்ரோ’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார்…’ வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கிறேன். நாக வம்சி தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்படுகிறது’ என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ரசிகர்களுக்கு அறிவுறுத்தலாக அவர் தெரிவிக்கையில், ‘நான் படத்திற்காக மட்டுமே சிகரெட் புகைக்கிறேன். தயவு செய்து யாரும் அதை சரி என எடுத்துக்கொண்டு உபயோகிக்காதீர்கள். ஒரு சிகரெட் தானே, ஒரு பஃப் என நினைத்து புகைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாதீர்கள். சிகரெட் உங்களை அடிமையாக்கி விடும். இதை எந்த விதத்திலும் நான் ஆதரிக்க மாட்டேன்.
‘ரெட்ரோ’ படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். படத்தை நான் பார்த்து விட்டேன். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறேன். வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதே உங்களுக்காகத்தான். உங்கள் அன்புக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா வெங்கி அட்லுரிக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
அப்படியென்றால், வெற்றிமாறனின் வாடிவாசல் படம்? இந்த படத்திற்கான பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அதற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
