ரன்வீர்சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம், சர்வதேச அளவில் டரெண்டிங்..

Web Ads

ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. கடந்த ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரையிலான நெட்ஃப்ளிக்ஸ் வாராந்திர தரவரிசைப் பட்டியலின்படி, ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான உலகளாவிய பட்டியலில் ‘துரந்தர்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் இதுவரை சுமார் 7.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை, பாகிஸ்தானின் லியாரி நகரில் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.

இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையரங்குகளில் வெளியிடப்படாத நிலையில், டிஜிட்டல் தளத்தில் அந்நாட்டு மக்கள் இந்தப் படத்தை அதிகளவில் விரும்பிப் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துரந்தர்’, உலகளவில் சுமார் 1,300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 30 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

ரன்வீர் சிங்குடன் அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் மாதவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஓமனில் இந்தப் படம் முதலிடத்திலும், சவூதி அரேபியாவில் ஆறாவது இடத்திலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

actor ranveer singh act dhurandhar movie  record break
actor ranveer singh act dhurandhar movie record break