‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்கள். அது மட்டுமல்ல, மனித குலத்திற்கு கிடைத்த மெகா பரிசு சிரிப்பு என்றால் மிகையல்ல. அதே நேரத்தில்.. என்றும், சிரித்து வாழ வேண்டுமே தவிர, பிறர் சிரிக்க வாழக் கூடாது என்ற பாடல் வரிகளும் கவனிக்கத்தக்கது. சரி..விஷயத்திற்கு வருவோம்..

இயக்குனர் நெல்சன் திலீப்குமார், முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள திரைப்படம் தான் ‘ப்ளடி பெக்கர்’. அவரிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி வந்த சிவபாலன் முத்துக்குமார் என்பவர் முதல் முறையாக இயக்குனராக, இந்த திரைப்படத்தின் மூலம் களமிறங்கி இருக்கிறார்.

ஏற்கனவே ‘டாடா’ மற்றும் ‘ஸ்டார்’ போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகர் கவின், முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் இப்போது ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் அவர் ஒரு படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வருகின்ற தீபாவளி திருநாளுக்கு சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படத்தோடு மோத உள்ள ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் தழும்பும் ஒரு ஜனஞ்சகமான படமாக இது இருக்கும் என்பதை இந்த டீசர் காட்சிகள் காட்டி இருக்கிறது.

‘ப்ளடி பெக்கர்’ டீசர் ஒரு நிமிடம் 19 செகண்ட்ஸ் ஓடி, மிகச் சுருக்கமாக கதையைச் சொல்லி விடுகிறது.

அதாவது, இரண்டு கால்களையும் இழந்த இளைஞன் ஒருவன் (கவின்), மரப்பலகையில் அமர்ந்த நிலையில், கைகளால் தள்ளியே ஊர்ந்து வந்து.. சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்காரரிடம் பிச்சை கேட்கிறான்.

அதற்கு ஆட்டோக்காரர், ‘டேய்.. நானே காசுக்கு சவாரி வராம செம கடுப்புல இருக்கேன்டா..’ என்கிறார்.

இதற்கு பிச்சைக்காரன், ‘உன்னை மாதிரி எனக்கும் காலு மட்டும் இருந்தா.. நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்..’ என்றதும், ஆட்டோக்காரர் ஒரு ரூபாய் நாணயத்தை தட்டில் போடுகிறார்.

அப்போது, சடலத்தை புதைப்பதற்காக இறுதி ஊர்வல வண்டி சாலையில் வர, அதன் முன்பு மேளதாளம் முழங்க பலர் ஆடிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அதிரடி ஆட்டத்தோடு ஆட்டமாக, பிச்சைக்காரன் (கவின்) புதிய உற்சாகத்தோடு.. மிக ஸ்டைலாக எழுந்து நின்று செம ஆட்டம் போட, அந்த ‘கலக்கலான’ காட்சியை பிச்சையிட்ட ஆட்டோக்காரர் அதிர்ச்சியில் விழி விரிய பார்க்கிறார்..’ என்பதோடு ‘ப்ளடி பெக்கர்’ டீசர் அதிரி புதிரியாக முடிவடைகிறது.

எனவே, இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார், தன்னுடைய குருவான நெல்சன் திலீப்குமாரைப் போல நகைச்சுவை உணர்வுமிக்கவர் என்பதையும் இந்த திரைப்படம் உணர்த்தும்’ எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுவைகள் ஆறு என்று யார் சொன்னது? ஏழாவதாக எழுந்ததே நகைச்சுவை; அதனை நாளும் சுவைப்போம்.!