கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..
கடனை திரும்ப செலுத்தும்வரை நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடனாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்து ஆட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில்,தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
அந்தத் தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்து ஆட்சியர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, ஞானவேல் ராஜா எப்போது கடன் தொகையை செலுத்துவார் என பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

