கே.பாலசந்தரையும், பாரதிராஜாவையும் இனணத்து நடிக்க வைத்து கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி “ரெட்டச்சுழி” படத்தை இயக்கிய தாமிரா இயக்கத்திலும், தயாரிப்பிலேயும் சமுத்திரகனி – “ஜோக்கர்” ரம்யா பாண்டியன் ஜோடி நடிக்க வெளிவந்திருக்கி படம் தான் “ஆண் தேவதை”.
தன் குருநாதர் கே.பாலசந்தர் மேல இருக்கிற மரியாதை காரணமாக தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு, “சிகரம் சினிமாஸ்”னு பெயர் சூட்டிட்டு, கே.பி.சார் பாணியிலேயே புரட்சிகரமாக இந்த “ஆண் தேவதை” படத்தை எடுக்க நினைச்சிருக்கிற தாமிரா, அதில் பாதி வெற்றியே பெற்றிருக்கிறார்.
கதைப்படி, ஹீரோ மெடிக்கல் ரெப் இளங்கோ – சமுத்திரகனியும், ஹீரோயின் ஐ.டி.யுவதி ஜெசிகா – ரம்யா பாண்டியனும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட தம்பதிங்க. ஒரு பெண், ஒரு ஆண்… அப்படின்னு இரட்டை குழந்தைகளுக்கு தாய் – தந்தையரான இருவருக்கும் ஒரு கட்டத்துல குழந்தைகளை பார்த்துக்கிறதா, தங்களோட கேரியரை பார்க்கிறதா…? ன்னு மோதல் தலைதூக்குது.
அதுல பொண்டாட்டி ரம்யாவை வேலைக்கு அனுப்பிட்டு, தன் வேலையை ராஜினாமா பண்ணிட்டு வீட்டோட புருஷனா இருந்து தன் குழந்தைகளை நல்லவிதமா வளர்க்கிற பொறுப்பை ஏத்துக்கிறார் சமுத்திரகனி, ஊர் உலகம் கிண்டல், கேலி பண்ணினாலும், “எந்தக் குழந்தையும்… நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே… அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அண்ணை வளர்ப்பினிலே…” அப்படிங்கிற பாடலில் ஒரு சின்னசேன்ஜாக, நம்ம ஆண்தேவதை… சமுத்திரம் வளர்பிலே, நல்ல விதமா, வளர்ந்து நல்லா போயிட்டிருக்கிற குடும்பத்துல ஒரு கட்டத்துல பொண்டாட்டி ரம்யாவால பிரச்சினை தலைதூக்குது.
அதுவும் எப்படி? தன் சம்பாத்யத்தால தான் எல்லாமும், இந்த குடும்பமும் அப்படிங்கிற தலை கணம் ரம்யாவுக்கு…. அதனால, அசந்து தூங்கிட்டிருக்கிற தன் ஆண் வாரிசை விட்டுட்டு, கொட்டகொட்ட முழிச்சி இருந்துட்டு தன் பின்னாடியே வர்ற தன் பெண் குழந்தையை அழைச்சுகிட்டு நடு நீசியில வாழ்ந்து காட்டுறேன்னு பொண்டாட்டியோட காசு, பணம் எதையும் கையீ எடுத்துக்காம கிளம்புறாரு… சமுத்திரம்.
அப்படி கிளம்பி போன சமுத்திரகனி ஜெயிச்சாரா? ஆம்படையான் இல்லாம, ஆண் வாரிசோட ஆடம்பரமா வாழ நினைக்கிற நாயகி ரம்யா பாண்டியன் ஜெயிச்சாரா…? அப்படிங்கிறதுதான் “ஆண் தேவதை” படத்தின் மீதிக் கதையும், களமும்.
சமுத்திரகனி, வழக்கம் போலவே கேரக்டரோடு ஒன்றிப் போயிருக்கிறார். தேவ குட்டச்பேட் டச் என்றால் என்ன? அப்படிங்கற விஷயத்தை தன் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தன் அப்பார்ட்மென்ட் குழந்தைங்க அத்தனை பேரையும் கூட்டி வச்சு சொல்லித் தரும் சமுத்திரகனி, தன் மனைவியை வேலைக்கு அனுப்பிட்டு, பிளாட்ல, ஹவுஸ் ஒய்ப்பா இருக்கிற குடும்ப பொம்பளைங்கக் கூட காட்டுற நெருக்கம் சரியாங்கறதை சமுத்திரகனி சார் தான் சொல்லணும்.
அவர் அப்படி ஒன்றும் தப்பா பிஹேவ் பண்ணலியேன்னு கேட்டா, அப்புறம் எதுக்கு அவங்களோட சீட்டாடிகிட்டிருக்கிற சமுத்திரம், அலுவலகத்தில் இருந்து திரும்பும் தன் மனைவியைக் கண்டதும், ஏன், ஓடி ஒளியறார்..? பிள்ளைங்களுக்கு பொய் சொல்லக் கூடாதுன்னு போதிக்கிற இவர், பொண்டாட்டிகிட்ட எல்லா விஷயத்தையும் நிஜமா? நியாயமா..? நிதர்சனமா இருக்கணுமா? இல்லையா..? இது மாதிரி இளங்கோவா வர்ற சமுத்திரகனி பாத்திர படைப்புல ஏகப்பட்ட ஓட்டை, உடைசல்.
அதே மாதிரி, மோசமான லாட்ஜில் பெண் குழந்தையுடன் போய் தங்குவதும் அங்கு பக்கத்து ரூமில் இருந்து வரும் ஆபாச சப்தம் காதில் விழாது காதை பொத்துவதுமாக பண்ணும் அலப்பறைகள் தாங்க முடியலை.
மேற்படி நாயகர் சமுத்திரகனியின் பாத்திரப்படைப்பு தான் இப்படின்னா, நாயகி “ஜோக்கர்” புகழ் ரம்யாபாண்டியன் நன்றாகவே நடித்திருக்கிறார் என்றாலும், ரம்யா தன் ஆபிஸ் கொலிக்ராயோடு சேர்ந்து குடிப்பாராம், கும்மாளம் அடிப்பாராம். ஆனா அவர் பேட் – டச் பண்ணும் போது ரம்யா கொதித்து கிளம்புவாராம்.
அதனால அவரை ராய் வேலையை விட்டு தூக்குவாராம். அதனால ரம்யா, கடன்காரங்க கிட்ட, நாயா, பேயா படுவாராம். உடனே ஆட்டோ ஓட்டிக்கிட்டே ஹோட்ல்லயும் சர்வரா இருக்கிற ஹீரோ சமுத்திரகனி, பொண்டாட்டிய சிங்கிள் நைட்ல எல்லா பிரச்சினைகளில் இருந்தும் மீட்டெடுத்து குடும்பத்தையும் தூக்கி நிறுத்துவாராம். நல்லா இருக்குதுய்யா உங்க நியாயம்.
இளங்கோ – சமுத்திரகனி, ஜெசிகா – ரம்யா பாண்டியன் இருவரது பாத்திரம் தான் இப்படின்னு இல்ல… ரம்யாவோட, பிரண்டா வர்ற சுஜாவாருன்னி தன் புருஷன் பிரஜன் கிட்ட ஈகோ பிரச்சினை பண்ணிட்டு, பிஎம்டபிள்யூ கார், பெரிய ப்ளாட் குடியிருப்புன்னு கடனுக்கு வாங்கி, வசதியா வாழ் வாராம். கூடவே சுப்ரீயர் ராய் கூட ரம்யா பாண்டியனை இல்லீகளா சேர்த்து வைக்கப் பார்ப்பாராம். ஆனா, அவருகிட்ட, அவர் ஆடம்பரத்துக்காக வாங்கி கட்டாத கடனை வசூலிக்க வர்றவன், அவரு முன்னாடி, வேட்டிய அவத்துட்டு நின்னா, அசிங்கப் பட்டு தூக்குல தொங்குவாராம். அட போங்க சார்!
ராய் ஆக வருகிற அந்த ஐ.டிவில்லன், பொண்டாட்டிய கனியிடமிருந்து பாது காக்கபடாத பாடுபடும் இளவரசு, ராதாரவி, காளி வெங்கட்…. உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர்.
விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, ஒவியப்பதிவு என்பது படத்தின் மீதான ஈர்ப்பை கூட்டுகிறது.
ஜிப்ரானின் பின்னணி இசையும், “மலரின் நறுமணம் போகுமிடம் மாதா கோயில் மணி ஒலி…” ஆகிய பாடல்களும் படத்திற்கு பெரும் பலம்.
இயக்குனர் “ரெட்டைசுழி” தாமிரா வின் எழுத்து மற்றும் இயக்கத்தை இங்கு இப்பட விமர்சனத்தில், படத்தின் கதையிலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் ஏகமாக விமர்சித்து விட்டோம்.
எனவே, ஒரு சில வரிகளில் சொல்வதென்றால், க்ளைமாக்ஸில், ஆண் தேவதை கனி, பெண் தேவதை ரம்யாவை குழந்தைகளை பார்த்து கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் வைத்து விட்டு மீண்டும் வேலைக்கு போக ஆரம்பிப்பதாக படத்தை முடித்திருப்பது, இயக்குனர் தாமிரா, தான் சொல்ல வந்த கான்செப்டில் இருந்து விலகி இருப்பதாக தோன்ற வைப்பது பெரும் பலவீனம்.
மொத்தத்தில், “ஆண் தேவதை’ – ‘பெரிதாக ரசிகனை ஈர்க்குமா? தெரியவில்லை!”